வாடிப்பட்டி அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சாலை மறியல்


மதுரை: மதுரை வாடிப்பட்டி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மேட்டுநீரேத்தான் கிராமத்தினர் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்டது மேட்டுநீரேத்தான் கிராமம். இக்கிராமத்தில் ஒரு தரப்பினர் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் எருதுகட்டு விழா நடப்பதால், வடமாடு நடத்த மற்றொரு தரப்பினர் எதிர்த்தனர். இதனால் மஞ்சுவிரட்டு நடத்த முடியாமல் தடைபட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரோடு தகராறு செய்தனர். இதுகுறித்து சோழவந்தான் போலீஸில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று மேட்டுநீரேத்தான் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த முயன்ற தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரை கற்கள், ஆயுதங்களால் தாக்கினர். இதில் சடையாண்டி, ராமச்சந்திரன், சூர்யா உள்பட சிலர் காயமடைந்தனர். வாகனங்கள், கடைகள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஆண்டிபட்டி பங்களா பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதித்ததால், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தாக்கியவர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேலும் மேட்டுநீரேத்தான் கிராமத்தில் மோதல் சம்பவம் நிகழாமல் இருக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

x