தேர்தல் பிரச்சாரத்தில் கூறியபடி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்: அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தீர்மானம்


மதுரை: தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னபடி திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க ஆண்டுப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரையில் இன்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்தின் 10-ம் ஆண்டு மாவட்ட பேரவை ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள எம்.ஏ.வி.எம்.எம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முனைவர் சு.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஆர்.சொக்கலிங்கம் வரவேற்றுப் பேசினார். மாவட்ட இணைச் செயலாளர் கே. நாராயணன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் அ.பால்முருகன், மாவட்டப் பொருளாளர் என்.ஜெயராமன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா ஆகியோர் பேசினர். மாநிலச் செயலாளர் குருசந்திரசேகரன் நிறைவுரையாற்றினார், மாவட்ட இணைச் செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

இந்தப் பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயதில் 10 சதவீதம் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வருமான வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் துவக்கப்படாமல் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை உடனடியாக துவங்கி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபடி திருமங்கலம் கப்பலூர் சுங்கச் சாவடியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் துறை தலைமை அதிகாரிகள் மூலம் அரசுப் பணிகளுக்கு ஆள் எடுக்கும் முறையை கைவிட்டு டிஎன்பிஎஸ்சி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

x