உயிலின் அசலை கிழித்து போலியை ஒட்டிய உழவர்கரை சார் பதிவாளர் அலுவலக காவலாளி கைது


புதுச்சேரி: உயில் ஒரிஜினலை கிழித்து போலியை ஒட்டிய உழவர்கரை சார்பதிவாளர் அலுவலக காவலாளி கைது செய்யப்பட்டார்.

உழவர்கரை, சார் பதிவாளர் பாலமுருகன் உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2001 ஆண்டு வரையிலான ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது அசல் 8 பத்திரம் பதிவு உயில் ஆவணங்களை கிழித்துவிட்டு 8 போலியான உயில் ஆவணங்களை ஒட்டி அதனை வைத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. இது சம்பந்தமாக. கடந்த 2.12.2023 அன்று சிபிசிஐடி காவல் நிலையத்தில் உழவர்கரை, சார்பதிவாளர் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் புதுச்சேரி. குற்றப் பிரிவு குற்ற புலனாய்வு துறை 8 போலி உயில்களில் முதல் போலி உயிலை ஆய்வு செய்தது. அப்போது, கடந்த 1980-ம் ஆண்டு கோட்டகுப்பத்தைச் சேர்ந்த அப்துல் சமீத் நத்வீ என்பவர் கடலூர், மஞ்சகுப்பத்தை சேர்ந்த சித்ரா என்பவர் மைனராக இருக்கும் போது அவரது பெயரில் உயில் எழுதி வைத்ததாகவும், அதனை வைத்து மேலும் சில பரிவர்த்தனை நடந்துள்ளதும் தெரியவந்ததது.

சீனியர் எஸ்.பி கலைவாணன் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் எஸ்.பி ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார். காவலர்கள் பழனி ராஜா மற்றும் இளந்தமிழ் ஆகியோருடன் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவருக்கு சொந்தமான இடத்தை மாற்றி அப்துல் சமீத் நத்வி என்பவர் சித்ரா, மஞ்சக்குப்பம் என்பவர் மைனாராக இருக்கும் போது உயில் எழுதி வைப்பது போல் போலியாக தயார் செய்து, ரவிச்சந்திரனும் (சித்ராவின் தாய்மாமா) அவரது மனைவி லதாவும் (சித்ராவின் அக்கா). அவர்களுக்குள் உள்ள உறவை நீதிமன்றத்தில் மறைத்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு மூலம் லதா பெயரில் பதிந்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து சித்ரா, ரவிசந்திரன் போலிப்பத்திரம் தயார் செய்த மணிகண்டன் மற்றும் அதற்கு உதவிய மஞ்சினி மற்றும் சித்தார்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதில் மணிகண்டன், மஞ்சினி, சித்தார்த்தன் ஆகிய 3 பேரையும் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை செய்த போது போலி பத்திரத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரிஜினல் உயிலை கிழித்து போலியை ஒட்டியது சார்பதிவாளர் அலுவலக காவலாளி உத்திரவேலு என்பது தெரியவந்தது. இதனையடுத்து உத்திரவேலு என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதனயைடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

x