சென்னை ஃபார்முலா 4 பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு


சிவக்குமார்

சென்னை: கார் பந்தய பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெறுகிறது. பார்முலா கார் பந்தயத்துக்காக கடந்த 3 நாட்களாக, தீவுத் திடல் பகுதியில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் நேற்று மதியம் தீவுத்திடல் அருகே பார்முலா கார் பந்தயம் தொடங்கும் பகுதியில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

அருகில் இருந்த போலீஸார், அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார். சிவக்குமாருக்கு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்கெனவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த போது நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்து சிவக்குமார் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிவக்குமாருக்கு ஹேமலதா என்ற மனைவியும், சங்கர நாராயணன் என்ற மகனும், சஞ்சீவ் மேனகா என்ற மகளும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில் வசித்து வருகிறார். பாதுகாப்புப் பணியின் போது நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு காவல் உதவி ஆணையர் உயிரிழந்த சம்பவம் போலீஸாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.25 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றிவந்த சிவகுமார் (வயது 53) இன்று (31.8.2024) பகல் சுமார் 12.45 மணியளவில் சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

காவல் துறை உதவி ஆணையர் சிவகுமார் மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சிவகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

x