பொத்தேரி விடுதியில் போதை பொருட்கள் பறிமுதல்: மாணவர்களுக்கு சப்ளை செய்த ரவுடி கைது


பொத்தேரி: பொத்தேரியில் சுமார் 600 குடியிருப்புகள் கொண்ட தனியார் விடுதியில் போலீஸார் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 19 கல்லூரி மாணவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் போதைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும், கஞ்சா சாக்லெட் விற்பனையும் நடந்து வருகிறது. இதனால், சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அபோட்வேலி என்ற பெயரில் சுமார் 600 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் வாடகைக்கு தங்கியுள்ளனர். இந்த விடுதி அருகில் தனியார் கல்லூரி செயல்படுவதால் அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் இங்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் தனியார் விடுதியின் 500 அறைகளில் நேற்று அதிகாலை சுமார் 1,000 போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இதில் அரை கிலோ கஞ்சா, 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில்20 எம்.எல்., பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக 19 மாணவர்களிடம் தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிடிபட்ட மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்தது ஏ ப்ளஸ் பிரிவு ரவுடியான செல்வமணி (29) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வமணியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா, 4 பட்டா கத்திகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா தேடுதல் வேட்டையில் 15 மாணவர்களிடம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் 20 வழக்குகள் பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்து உரிமை கோரப்படாத 60 இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x