தமிழகத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


சென்னை: அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலிபோர்னியாவில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆய்வகங்கள் அமைப்பது தொடர்பாக முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், தமிழகத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் (ஆக.30)கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அதன் விவரம் வருமாறு:

ஆப்பிள் நிறுவனம்: ஆப்பிள் நிறுவனத்தின் உயர்அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின்சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில்முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அப்போது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்துக்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் உற்பத்திசூழலை மேம்படுத்த தமிழக அரசுமேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை கோடிட்டுக் காட்டினார். எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க இருப்பதாகவும் கூறினார்.

இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று அந்நிறுவன உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

கூகுள் நிறுவனம்: கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம் (Search Engine Technology), கிளவுட்கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ், நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும். அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அப்போது தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும்தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்துக்கான திறன் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் முதல்வர் பேசினார்.

இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ்,கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்க்டுஇன் முதன்மை செயல் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின், சந்தித்துப் பேசினார். மேலும், டேட்டா சென்டர் விரிவாக்கம், உலகளாவிய திறன் மையங்கள்அமைப்பது, செயற்கை நுண்ணறிவு திறன் முயற்சிகளை உருவாக்குவது உட்பட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.

இந்நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர்வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வியப்பூட்டும் அனுபவம்: இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில் , "ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்றுபார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பரிசளித்தது குறித்தமுதல்வர் ஸ்டாலினின் சமூகவலைத்தள பதிவு: நமது உள்ளூர்கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக 'ஸ்டார்ட்-அப்தமிழ்நாடு'-இன் 'தடம்' எனும்முக்கிய முன்னெடுப்பை அறிமுகம் செய்தபோது, அமெரிக்காவில் நான் சந்தித்த முதலீட்டாளர்களுக்குத் "தடம் - தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்" எனும் பெட்டியை நினைவுப்பரிசாக வழங்கியதில் பெருமையடைகிறேன். நமதுபண்பாட்டுப்பெருமையைக் கொண்டாவோம்; முன்னேற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x