பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை


சென்னை: பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை 18-ல் இருந்து 21 ஆகஉயர்த்த வழிவகை செய்யும்சட்டம் இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் புரட்சிகரமான சட்டமாகும்.

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 56 சதவீதபெண்களுக்கு 21 வயதுக்கு முன்பாக திருமணம் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களில் 75 சதவீதத்தினருக்கு 21 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடைபெற்று விடுகிறது. இதனால், அந்த பெண்களால் பட்டப்படிப்பை படிக்க முடிவதில்லை. போதிய கல்வியறிவுஇல்லாததால் அவர்கள், அவர்களின் அனைத்து தேவைகளுக்கு குடும்பத்தினரையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட்டால், அனைத்துப் பெண்களும் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பை படிக்க முடியும். இது அவர்களின் முன்னேற்றத்துக்கும், தற்சார்புக்கும் வழிவகுக்கும்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்த மத்திய அரசு, அதனடிப்படையில் சட்ட முன்வரைவை தயாரித்து கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால், சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக்குழுவின் காலக்கெடுவை இனியும்நீட்டிக்காமல், அதன் அறிக்கையை பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டமுன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

x