தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில், இரவு முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததில் 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசும் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.
இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ள நிலையில் இதுபோன்ற கட்டுப்பாட்டை அரசு கடந்த சில ஆண்டுகளாக விதித்து வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று உற்சாகமாக தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை வரவேற்க தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென்று இருக்கிறது. சென்னை பெருங்குடியில் - 178, அரும்பாக்கம் - 159, மணலி - 152, ராயபுரம் - 115, கொடுங்கையூர் - 112, ஆலந்தூர் - 102 என அதிகரித்து இருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு தரக் குறியீடு 231 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் காற்று மாசு மோசமடைந்து இருக்கிறது.