சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு, மீரட் - லக்னோ இடையே 3 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


புதுடெல்லி: சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு மற்றும் லக்னோ - மீரட் வழித்தடங்களில் 3 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புதிய வந்தே பாரத் ரயில்கள், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத்ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் உட்பட பலமாநிலங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில்,சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு, மீரட் - லக்னோ ஆகிய வழித்தடங்களில் 3 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில்களை டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சென்னை, மதுரை, லக்னோ ஆகியஇடங்களில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தன.

புதிய ரயில்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு, மீரட் - லக்னோ வழித்தடங்களில் 3 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த 3 வழித்தடங்களிலும் உள்ள மக்களுக்கு எனதுவாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய வந்தே பாரத் ரயில்கள், ‘விக் ஷித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதற்கு இந்த ரயில்கள் சேவை ஊக்கமளிக்கும். இன்று தொடங்கிவைக்கப்பட்ட புதியவந்தே பாரத் ரயில்கள் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா இடையே ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும்.

வந்தே பாரத் ரயில் போக்குவரத்தால் தொழில்கள் மேலும் வளரும். இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தமிழகத்தின் கோயில் நகரமான மதுரையையும், தொழில்நுட்ப நகரமான பெங்களூருவையும் புதிய சேவை இணைக்கிறது. மேலும், வந்தே பாரத் ரயில்களில் விரைவில் படுக்கை வசதி, புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் ஏற்கெனவே 6 வந்தே பாரத் ரயில்களுடன் தற்போது 2 புதிய வந்தே ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். வந்தே பாரத் ரயில் கள் நின்று செல்லும் வகையில் சிறிய ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படும்.

சென்னை - நாகர்கோவில் ரயில் மாணவர்கள், விவசாயிகள், ஐ.டி. பணியாளர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக விளங்கும். மேலும், சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையிலும் அமையும்.

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு தென்மாநிலங்களில் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன. தென் மாநிலங்கள் நிறைய திறமைகள் உள்ள நிலப்பகுதியாக, ஆதாரங்கள் நிறைந்ததாக வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதியாக விளங்குகின்றன. தமிழ்நாட்டின் மேம்பாட்டோடு ஒட்டுமொத்த தென் இந்தியாவும் வளர்ச்சி அடைவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

மத்திய அரசு வளர்ச்சிக்கு அளிக்கும் முன்னுரிமையை ரயில்வே துறை மேம்பாட்டின் மூலம் அறியலாம். தமிழ்நாட்டுக்கு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.6,000 கோடிக்கு மேல் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2014-ம்ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 7 மடங்கு அதிகம். அதேபோல் கர்நாடகாவுக்கும் பட்ஜெட்டில் ரூ.7,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும்கடந்த 2014-ம் ஆண்டைவிட 9 மடங்கு அதிகம்.

புரட்சியின் நிலமாக மேற்கு உத்தர பிரதேசம் திகழ்கிறது. இன்றுமீரட்டில் இருந்து லக்னோ வரை வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டது, இந்த பிராந்தியத்தின் வளர்ச்சியில் புரட்சியை வெளிப்படுத்துகிறது. நாட்டின் ஒவ்வொரு நகரங்களும், ஒவ்வொரு வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்களின் தேவை உள்ளது. தற்போது நாடு முழுவதும் மொத்தம் 102வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்துள்ளனர். இது வந்தே பாரத் ரயில்களின் வெற்றியை மட்டும் பறைசாற்றவில்லை. இந்தியாவின் கனவை, விருப்பங்களை நிறைவேற்றும் சின்னமாக வந்தே பாரத் ரயில்கள் விளங்குகின்றன.

வந்தே பாரத் ரயில்களுடன் அம்ரித் பாரத் ரயில்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க வந்தே மெட்ரோவும் விரைவில் தொடங்கப்படும். இந்திய நகரங்கள் பெரும்பாலும் ரயில் நிலையங்களின் பெயர்களை வைத்தே அடையாளம் காணப்படுகின்றன. அதன்படி, நாடு முழுவதும் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ரயில், சாலை, நீர்வழிகளில் இணைப்பு பலப்படும் போது நமது நாடும் பலப்படும். ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்பட இவை உதவுகின்றன. வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். எனினும், இன்னும் நிறைய தூரம் செல்லவேண்டி இருக்கிறது. நாட்டில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உயரதிகாரிகள் காணொலி மூலம் பங்கேற்றனர்

x