நடிகை விந்தியாவை பற்றி ஆபாசமாக பேச்சு: திமுக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு


குடியாத்தம் குமரன்

நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகியும், பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணை செயலாளருமான விந்தியாவை பற்றி ஆபாசமாகவும், அருவருத்தக்க வகையிலும் பேசியிருந்தார். இந்த வீடியோ தொடர்பாக அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை, விந்தியா சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். பின்னர் தேசிய மகளிர் ஆணையம் இப்புகார் மனுவை சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி உடனடியாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் நடிகை விந்தியாவிடம் புகாரை பெற்று குடியாத்தம் குமரன் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணை அவமரியாதையாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x