அமோனியா வாயு தாக்கி ஊழியர் மரணம்: தூத்துக்குடியில் போராட்டம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு


உறவினர்கள் போராட்டம் | படம்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி: டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு தாக்கி உயிரிழந்த ஊழியர் ஹரிஹரனின் உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுகம் விரைவு சாலையில் டாக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சோடா ஆஷ் மற்றும் அமோனியம் குளோரைடு உரம் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஜோயல் என்பவரிடம் மெக்கானிக்காக ஏரல் அருகே மஞ்சள் நீர்காயலைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன்(23), தூத்துக்குடி காட்டன் சாலையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தனராஜ்(37), திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் மாரிமுத்து(24) உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

நேற்று (ஆக.30) மாலை 3.15 மணியளவில் அமோனியம் குளோரைடு பிரிவில் அமோனியோ குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஹரிஹரன், தனராஜ், மாரிமுத்து உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது, குழாய் வால்வை அடைப்பதற்கு பதிலாக திறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஹரிஹரன் மீது அமோனியா வாயு அடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன்ராஜ், மாரிமுத்து ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, காலில் அமோனியம் குளோரைடு கொட்டியதால் காயமும் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முத்தையாபுரம் போலீஸார் ஹரிஹரன் உடலைக் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஹரிஹரன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரிஹரன் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

இன்று 2-வது நாளாக ஹரிஹரனின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து துணை ஆட்சியர் பிரபு, நகர துணை கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா மற்றும் ஹரிஹரனின் உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் ஆலை நிர்வாகம் சார்பில் இழப்பீடாக ரூ.25 லட்சம் மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம், ஈமச்சடங்குச் செலவுக்காக ரூ.2 லட்சம், மேலும் ஓய்வூதிய திட்டம் மூலம் ஹரிஹரனின் பெற்றோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க என முடிவு செய்யப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஹரிஹரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு ஹரிஹரனின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்து கலைந்து சென்றனர். மேலும், தொழிற்சாலைகளில் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாத வண்ணம் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

x