தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘டீன்’ பணியிடம் காலி - நிர்வாகப் பணிகள் பாதிப்பு


மதுரை அரசு மருத்துவமனை (கோப்புப் படம்)

மதுரை: ‘டீன்’ பேனல் பட்டியல் இன்னும் தயாராகாததால், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘டீன்’ பணியிடம் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களில் பொறுப்பு ‘டீன்’ நியமித்து, சமாளிக்கப்படுவதால் எப்போது நிரந்தர ‘டீ்ன்’ நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அடுத்தப்படியாக அதிகளவு நோயாளிகள் வரக்கூடிய மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை திகழ்கிறது. மருத்துவக்கல்வி வட்டாரத்தில் இந்த மருத்துவமனை ‘டீன்’ ஆக இருப்பது, மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஏப்ரல் 30ம் தேதி மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ ஆக இருந்த பேராசிரியர் ரெத்தினவேலு ஓய்வு பெற்ற பிறகு தற்போது வரை புதிய ‘டீன்’ நியமிக்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக ‘பொறுப்பு’ டீன் ஆக பேராசிரியர் தர்மராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். அவரும், நேற்றுடன் ஒய்வு பெற்றார். அவருக்கு பதிலாக தற்போது இருதவியல் துறை பேராசிரியர் டாக்டர் செல்வராணி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘பொறுப்பு’ டீன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதமாக மதுரை அரசு மருத்துவமனை நிரந்தரமாக ‘டீன்’ இல்லாமல் ‘பொறுப்பு’ டீனை கொண்டு நிர்வாகம் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் ‘பொறுப்பு’ டீனை கொண்டு சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி உள்பட 14 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ‘டீன்’ பணியிடம் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களில் தற்போது ‘பொறுப்பு’ டீன்களை கொண்டு நிர்வாகம் நடத்தப்படுகிறது. இந்த பணியிடங்களை நிரப்ப ‘டீன் பேனல்’ தயார் செய்ய வேண்டும். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் ‘டீன் பேனல்’ தயாரிப்பு மந்தமாக நடக்கிறது. இது மருத்துவத் துறையில் மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. வேண்டியவர்கள், வேண்டாதவர்களை அந்த ‘டீன்’ பேனலில் திணிக்கப் பார்க்கிறார்கள்.

இந்த விவரத்தை அதிகாரிகளால், சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல முடியவில்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் சொல்வதை அவர் கேட்பதாலே ‘டீன் பேனல்’ தயாரிப்பதில் இந்த தாமதமும், பல மருத்துவக்கல்லூரிகளில் ‘பொறுப்பு’ டீன் நியமனமும் நடப்பதற்கு காரணமாக உள்ளது. அமைச்சர் நினைத்தால் ஒரு நாளில் கூட ‘டீன் பேனல்’ தயார் செய்து மறு நாள் புதிய ‘டீன்’களை நியமிக்கலாம். அரசு மருத்துவமனைகளில் நிரந்தர ‘டீன்’ செயல்படுவதற்கும், ‘பொறுப்பு’ டீன் நிர்வாகம் நடத்துவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

பொறுப்பு ‘டீன்’னால் இருக்கிற நடைமுறைகளை அப்படியே கொண்டு செல்ல தான் முடியுமே தவிர, புதிய முடிவுகளை எடுக்க முடியாது. அவரால் சீனியர் பேராசிரியர்கள், மருத்துவர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு நிர்வாகத்தை கட்டுக்கோப்பாக நடத்த முடியாது. அரசு மருத்தவக் கொள்கைளை செயல்படுத்துவது, நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை முடிவெடுப்பது சிரமம். ‘டீன் பேனல்’ தயாரிப்பில் இரு தரப்பு பேராசிரியர்களிடையே நீடிக்கும் கோஷ்டி பூசலால், ‘பேனல்’ வெளியிட்ட பிறகும் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது’’ என்றார்.

‘டீன் பேனல்’ தயாரிப்பு தாமதம் ஏன்? - இதுகுறித்து தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் சங்குமணியிடம் கேட்டபோது, “இன்னும் ஒரு வாரத்தில் ‘டீன் பேனல்’ தயாராகி காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய ‘டீன்’கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள். பேராசிரியர் மற்றும் இணைப்பேராசிரியர் பணிகாலங்களையும், நிர்வாக அனுபவங்களையும் கொண்டு சீனியர் பேராசிரியர்களை பட்டிலை தயார் செய்து ‘டீன் பேனல்’ தயார் செய்ய வேண்டும். நிரந்தர ‘டீன்’ இல்லாவிட்டாலும் அதற்கான நிர்வாக பொறுப்பு அனுபவங்கள் கொண்ட சீனியர் பேராசிரியர்களை ‘பொறுப்பு’ டீன் ஆக நியமித்து அரசு கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தடையின்றி நடக்கிறது’’ என்றார்.

x