சென்னை: பார்முலா 4 கார் பந்தயம் இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழ் இன்று மாலை 6 மணிக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, பந்தயம் நடைபெறவுள்ள 3.5 கி.மீட்டர் தொலைவுக்கான வழித்தடத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து எப்.ஐ.ஏ-விடம் இருந்து பெறப்பட்ட தற்காலிக சான்றிதழ்களின் அடிப்படையில் போட்டிக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கி நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த அட்டவணையின்படி, இன்றைய தினம் பிரதான போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறுவதற்கான கால தாமதத்தைத் தொடர்ந்து, இன்று பயிற்சிப் போட்டிகள் மட்டுமே நடைபெறும் என்று புதிய அட்டவணையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ரேசிங் லீக் மற்றும் பார்முலா 4 ரேசிங்குக்கான பயிற்சிகள் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் பயிற்சி போட்டிகள் இரவு 11 மணி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, சென்னையில் பார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தய போட்டிகளை நடத்துவதற்கான சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழைப் பெறுவதற்கான கால அவகாசத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.