பொத்தேரி தனியார் விடுதியில் கஞ்சா புழக்கம்: பிரபல ரவுடி கைது; மாணவர்களிடம் போலீஸார் விசாரணை


செங்கல்பட்டு: பொத்தேரியில் உள்ள தனியார் விடுதியில் 1000 போலீஸார் நடத்திய சோதனையில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 19 கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ‘அடோப் வேலி’ (Abode Valley) என்ற பெயரில் சுமார் 600 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த தனியார் விடுதி அருகில் பிரபல எஸ்.ஆர்.எம். கல்லூரி செயல்படுவதால் அங்கு படிக்கும் மாணவர்களும் இங்கு தங்கியுள்ளனர். இந்த விடுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இந்த தனியார் விடுதியின் பல்வேறு அறைகளில் இன்று அதிகாலை முதல் சுமார் 1000 போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் அரை கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் 20 மி.லி., பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 19 மாணவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்த பிரபல ரவுடியான செல்வமணி (29) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சாவும் நான்கு பட்டா கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக எஸ்.ஆர்.எம் கல்லூரி அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடத்தப்பட்ட சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

x