கரூரில் கனமழை: வீடுகளைச் சூழ்ந்த கழிவு நீர் - மக்கள் மறியல் போராட்டம்


சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கரூர்: கரூர் அருகே மருத்துவர் நகர் பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால், வீடு மற்றும் தெருவை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கரூர் - ஈரோடு சாலையில் மக்கள் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் அருகேயுள்ள ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி மருத்துவர் நகர் பகுதியில், கனமழை பொழிவால் மழை நீர் வடிவால் வசதி இல்லாத காரணத்தால் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் வீட்டிற்குள் புகுந்தது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இரண்டு நாட்களாகியும் அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யாமலும், நீர் வடிவதற்கு வழிவகை செய்யாமல் அலட்சியத்துடன் இருந்து வருவதால் அரசு அதிகாரிகளை கண்டித்தும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீர் மற்றும் கழிவுநீரை வெளியேற்றினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக மக்கள் தெரிவித்தனர். மழைநீர், கழிவு நீருடன் தேங்கி தெருவிற்குள் நிற்பதால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாட்களாக குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் உறக்கம் இல்லாமல் இருப்பதாக வேதனையுடன் தங்கள் நிலையை தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்குப் பிறகு மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

x