முதுமலையில் இளம் யானைகளுக்கு ‘கும்கி’ பயிற்சி!


பயிற்சி மேற்கொள்ளும் யானை

முதுமலை: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு, ‘கும்கி’ பயிற்சி அளிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானை முகாம், கடந்த 1917 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது.

வனங்களில் வெட்டப்படும் மரங்களை இழுத்து வருவதற்கு இங்கு யானைகளுக்கு பயற்சி அளிக்கப்பட்டன. இதற்காக காட்டு யானைகளை, குழி வெட்டி பிடித்து, ‘கராலில்’ அடைத்து, அதை வளர்ப்பு யானைகளாக மாற்றி, மரம் இழுக்கும் பணிக்கு பயன்படுத்தி வந்தனர். கடந்த, 1982-ம் ஆண்டு வளர்ப்பு யானைகளை, மரம் இழுக்கும் பணியில் ஈடுபடுத்துவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ஆண் யானைகள் கும்கிகளாக மாற்றப்பட்டு, ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவது, அவற்றைப் பிடித்து வந்து, கராலில் அடைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், முகாம் யானைகள், சுற்றுலா பயணிகளை வனத்துக்குள் சவாரி அழைத்து செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது, முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் முகாமில் இரண்டு குட்டி யானைகள் உட்பட, 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஆறு யானைகள் ஓய்வு பெற்றன.

இங்கு உள்ள பயிற்சி பெற்ற ‘கும்கி’ யானைகள், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவது, அவைகளை பிடித்து முதுமலைக்கு கொண்டு வருவது, இளம் வளர்ப்பு யானைக்கு ‘கும்கி’ பயிற்சி வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இங்குள்ள வளர்ப்பு யானைகளான கிருஷ்ணா, கிரி, பொம்மி, ரகு, ஜம்பு, மசினி ஆகியவைகளுக்கு சில வாரங்களாக, தினமும் காலையில், ‘கும்கி’ பயிற்சி அளித்து வருகின்றனர். இதனை, சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, “கும்கி யானைகள் காட்டு யானைகளை கட்டுபடுத்துவதற்கு முதலில் அவைகளிடம் ஒருங்கிணைப்பு தேவை. காட்டு யானைகளை பிடிக்கும் போது முதலில் அவற்றிற்கு மயக்க ஊசி செலுத்தப்படும். மயக்கத்தில் செல்லும் காட்டு யானையை கும்கிகள் தடுத்து நிறுத்திய பின்னர், அந்த யானைக்கு சங்கிலி பிணைக்கப்படும். இதற்கு யானைகளுக்கும் ஒன்றோடு ஒன்றுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இந்த பயிற்சிகள் அனுபவம் வாய்ந்த பாகன்களை வைத்து வழங்கப்படுகிறது.

முகாமில் சீனியர் ‘கும்கி’ யானைகள் ஓய்வு பெறும் போது அதற்கு மாற்றாக புதிய கும்கி யானைகளின் தேவை உள்ளது. அதனை கருத்தில் கொண்டு, இளம் வளர்ப்பு யானைகளுக்கு ‘கும்கி’ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பருவமழை தொடங்கும் வரை பயிற்சி நடக்கும். முழுமையாக பயிற்சி பெற்ற யானைகள், சீனியர் கும்கி யானைகளுடன் இணைந்து ஊருக்குள் வரும் யானைகளை விரட்டுதல், அவற்றை பிடித்து லாரியில் ஏற்றி வனப்பகுதிக்குள் விடுதல், முகாமுக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும்” என்றனர்.

x