ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: ஆசிரியர் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு


சென்னை: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் சி.என்.பார்த்தி, செயற்குழு உறுப்பினரும், தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது ஆசிரியர்களிடம் மற்றும் ஊழியர்களிடம் எந்தவித பங்களிப்பும் இல்லாதது. மத்திய சிவில் சர்வீஸ் விதிகளின்படி உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுக்க வலியுறுத்தியும் பலதரப்பு ஊழியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்பியுள்ளன.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் அரசு ஊழியர்களின் நியாயமான நிலுவைத் தொகையை பறிக்கும் அதே தந்திரத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

மேலும் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு சராசரி அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கும். 25 ஆண்டுகளுக்கும் குறைவான ஆனால் 10ஆண்டுகள் வரையிலான விகிதாச்சார ஓய்வூதியம் என்றால், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 அரசால் முன்மொழியப்படுகிறது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.14,130 ஆக இருக்கும்.

எனவே, அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பற்ற வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

x