குரூப் 1 விடைத்தாள் மோசடி வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு


சென்னை: குரூப் 1 தேர்வு விடைத்தாளை மாற்றி மோசடி செய்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க கீழமைநீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வில் பங்கேற்ற ராம்குமார் என்பவர் விடைத்தாளை மாற்றி முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உதவிய நபரான கருணாநிதி மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், விடைத்தாளை மாற்றிய விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

ராம்குமார் நடத்திய சிசிடிவி கேமரா பொருத்தும் நிறுவனத்தில் மாதஊதியம் அடிப்படையில் பணிபுரிந்தேன். ராம்குமார் எழுதி கொடுக்கச் சொன்னதை எழுதி கொடுத்தேன். ஆனால் அவர் குரூப் 1 தேர்வுக்கான விடைத்தாளில் முறைகேடு செய்வார் என எனக்குத் தெரியாது.

ஆனால் போலீஸார் முறையாக விசாரணை நடத்தாமல் என்மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ரத்து செய்ய மறுப்பு: இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு குற்றவியல் வழக்கறிஞர் சி.இ.பிரதாப் ஆஜராகி, இந்தவழக்கில் இதுவரை 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு, அதில் 10 பேரிடம் சாட்சி விசாரணை முடிந்துள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கூடாது என்றார்.

அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்புதெரிவி்த்து, இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க சென்னைஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுஉள்ளார்.

x