எதிர்க்கட்சிகளின் கூட்டம் எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் திமுக அமைச்சர்களை குறி வைத்து அமலாக்கத்துறை களமிறங்குவதும் வாடிக்கையாகி உள்ளது.
இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டம் இன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் திமுக, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட இந்திய அளவில் 24 கட்சிகள் கலந்து கொள்கின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு பெங்களூரு செல்கிறார்.
இந்தநிலையில் தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை இல்லம், விழுப்புரம் இல்லம் மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியின் இல்லம், விழுப்புரத்தில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டை துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். செம்மண் குவாரி தொடர்பாக, அமைச்சர் பொன்முடி மீது 2012-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இதே போலத்தான் எதிர்க்கட்சிகளின் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவில் நடந்த போது அதற்கு ஒருவாரத்துக்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறிவைக்கப்பட்டார். அவரது இல்லம் மற்றும் உறவினர் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திமுகவும், அதன் தலைவர் மு.க ஸ்டாலினும் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு பழி வாங்கும் வகையில், மத்திய பாஜக அரசு திமுகவின் அமைச்சர்களை குறி வைத்து சோதனை நடத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பாஜக முனைகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.