சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்


பொன் மாணிக்கவேல் | கோப்புப்படம்

மதுரை: சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றிய பொன் மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்குபதிவு செய்தது. இதில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில், “மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன் மாணிக்கவேலை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தால்தான், அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரியவரும். எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிடப்பட்டது.

இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிபிஐதரப்பில், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

பொன்.மாணிக்கவேல் தரப்பில், “எனது பணிக்காலத்தில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரப்பட்டது.

இதையடுத்து, “பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 4 வாரங்கள் சென்னைசிபிஐ அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்

x