தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து பிரச்சினைகளையும் ‘ஜீரோ’ ஆக்கிவிடுவோம் இன்றைய மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாமன்றக் கூட்டம் இன்று கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, துணை ஆணையர் ராஜா ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் பேசினர்.
அப்போது, தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடு இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர். மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தீவிர சோதனை நடத்த வேண்டும். பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்க வேண்டும். டி.எம்.பி. காலனியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு நிரந்தர மருத்துவர் கிடையாது.
எனவே, அங்கு நிரந்தரமாக மருத்துவர் மற்றும் செவிலியரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள பூங்கா அருகே ரேஷன் கடை அமைக்க வேண்டும். சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே மீன்கடைகள் உள்ளன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேறு இடத்தில் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, “தூத்துக்குடி மாநகராட்சி, தமிழகத்தில் 2-வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விருது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாநகராட்சியில் முதல் கட்டமாக 6 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும். மற்ற வார்டுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படும்.
மண்டலம் வாரியாக குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் வரக்கூடிய மனுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் மூலம், மக்கள் குறைகள் தீர்ந்துள்ளது என தெரியவருகிறது. தற்போது சாலை பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செய்து வருகிறோம்.
மாநகராட்சி பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு அடையாள குறியீடு வழங்கப்பட உள்ளது. அதில் வரி விதிப்பு எண் எழுதப்பட்டு இருக்கும். இதனால் நாயின் உரிமையாளரை உடனடியாக அடையாளம் காண முடியும். அடையாள குறியீடு பெறாத நாய்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டு வ.உ.சி. கல்லூரி அருகே அமைக்கப்பட உள்ள கால்நடைகள் பாதுகாப்பு மையத்தில் விடப்படும். சுகாதாரத் துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை தடுக்க மாமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 153 பூங்காக்கள் உள்ளன. இவை சீரமைக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்காக தனியாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு சங்கங்கள் மூலம் கோரிக்கை விடுத்தால், மாநகராட்சி இடத்தில் அதற்கான மைதானம் அமைத்து ஒப்படைக்கப்படும். புதிய குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படுகிறது.
பல்வேறு மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பிரச்சினைகளையும் ‘ஜீரோ’ ஆக்கிவிடுவோம். சாலைகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தோண்டக்கூடாது. சாலைகளை சேதப்படுத்தி இருந்தால், அதில் சிமென்ட் கொண்டு சரி செய்ய வேண்டும். மீன் கடைகளை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டால் கடைகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படும்” என்று மேயர் கூறினார்.