ரூ.30 கோடியில் திட்ட பணிகள் - தாம்பரம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 95 தீர்மானங்கள் நிறைவேற்றம்


மேயர் வசந்த குமாரி தலைமையில் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. படம்: எம்.முத்துகணேஷ்.

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில், "தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க நியமிக்கப்பட்டுள்ள அவர்லேண்ட் என்ற ஒப்பந்ததாரர் சரி வர குப்பைகளை அகற்றுவதில்லை, பெரும்பாலான வார்டுகள் மற்றும் தெருக்களில் குப்பைகளை சேகரிக்க குப்பை வண்டிகளே வருவதில்லை என பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்தும் அவர்கள் அலட்சியமாகவே செயல்படுகின்றனர்.

மேலும் வாகனங்கள் இல்லை, வாகனங்கள் பழுதாகி விட்டது, பஞ்சர் ஆகிவிட்டது என பல்வேறு சாக்குகளை தெரிவிக்கின்றனர் என குற்றம்சாட்டினர். தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் கொசு தொல்லை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் டெங்கு பரவி வருகிறது, எனவே அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு தடுப்பு பணியாளர்கள் அந்த வேலையை சரியாக இல்லையென்றால் சம்மந்தப்பட்ட ஒப்பந்தத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்கள் மற்றும் மாடுகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில், மின்சார கம்பிகள் மீது மரக்கிளையில் சூழ்ந்துள்ள நிலையும் உள்ளது.

இதனால் சிறிய காற்று வீசும் போது மின் இணைப்பு துண்டிக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து விட்டது. பத்து ஆண்டுகளாகியும் இதுவரை சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் இணைப்புகள் வழங்கப்படவில்லை, வெளியாட்கள் மூலம் பணி செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்துமே தனியார், தனியார் என்று சென்றால், பொறியியல் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் எதற்கு, அவர்கள் மீது மேயருக்கு நம்பிக்கை இல்லையா ? அவசர கூட்டத்தில், பொருளில், வரி விதிப்பில் மாற்றம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை, வரி கமிட்டிக்கு தெரியப்படுத்தவும் இல்லை, ஒப்பதலும் பெறவில்லை. மக்கள் மீது மேலும் மேலும் வரியை அதிகரிக்கிறார்கள். இது மக்கள் விரோத செயல் என பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

பின்னர் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் பேசுகையில் : தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களின் குறைகள் அதிகளவில் உள்ளது. ஆனாலும் மாநகராட்சியில் உள்ள நிதியை கொண்டு தேவையான பணிகளை செய்து வருகிறோம். வரும் மழைக்காலத்தில் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பை அகற்றும் ஒப்பந்தம் எடுத்துள்ள அவர்லேண்ட் நிறுவனத்துடன் மாநகராட்சிக்கு சில பிரச்சனைகள் இருந்தது அவை ஒவ்வொன்றாக தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் முழுமையாக குப்பைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் உட்பட 95 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

x