ஆளுநர் ஆளும்கட்சி மோதலின் உச்சமாக, “ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலைப்படப் போவதில்லை" என்று முழங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவியுடனான கடும் மோதலின் விளைவாக திமுக ஆட்சி கலைக்கப்படும் என்று பாஜக தரப்பில் செய்தி பரப்பப்படும் நிலையில், முதல்வரின் இந்த ஆவேசப் பேச்சும் கவனிக்க வைக்கிறது.
“மத்திய பாஜக அரசை அப்புறப்படுத்தும் முயற்சியில், எந்த சூழ்நிலை வந்தாலும், ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றுதான் ஸ்டாலின் பேசினார். அதனால் ஆட்சிக் கலைப்பு பற்றிய பயம் வந்துவிட்டதாக அதற்கு அர்த்தமில்லை” என்று திமுகவினர் இதற்கு பொழிப்புரை தருகிறார்கள்.
இது தொடர்பாகப் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், ”அரசியலமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் புறக்கணிக்க துணிந்தவர்கள், கோடிகளை செலவழித்தாவது ஆட்சியை பெறவேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். இதைச் சுட்டிக்காட்டித்தான் முதல்வர் அப்படிப் பேசினார்” என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்.
“திமுகவை பொறுத்தவரை எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முடியாது என்பதால் ஆட்சியைக் கலைக்க முற்படுகிறார்கள். ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளபடி அவருடைய மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளாமல் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸின் அடியவராகப் பேசிக் கொண்டிருக் கிறார்” என டி.கே.எஸ்.இளங்கோவன் சொன்ன வார்த்தைகளும் அர்த்தம் பொதிந்தவை.
ஆளுநருக்கு இதுநாள் வரை சுடச்சுட பதிலடி கொடுத்து வந்த ஸ்டாலின், ஆளுநருக்கு எதிரான தங்களது குற்றச்சாட்டுகளை 19 பக்க கடிதமாகவே எழுதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில், டெல்லி சென்ற ஆளுநர், தமிழக அரசு, மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட சில முக்கிய கோப்புகளையும் கையோடு எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள்.
ஜூலை 8 ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், 11-ம் தேதி மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஆளுநர். டெல்லியிலிருந்து திரும்பியதும் தமிழக தலைமைச் செயலாளரை தனது இடத்துக்கு வரவழைத்துப் பேசி இருக்கிறார். செந்தில் பாலாஜி விவகாரம் என்று இதன் பின்னணி சொல்லப்பட்டாலும் இந்தச் சந்திப்பு களைத் தொடர்ந்து தான் ஆட்சிக் கலைப்பு பேச்சும் அழுத்தம் பெற்றுள்ளது.
திமுக ஆட்சிக்கு பாஜக அச்சுறுத்தல் கொடுப்பதாகப் பேசப்படும் நிலையில், “மற்ற கட்சியினரோ, ஆளுநரோ, ஜனாதிபதியோ இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே கவிழுந்துவிடும்” என்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். “ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த முடியாவிட்டாலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியும். அதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது” என்று ஆதியிலிருந்தே சொல்லி வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ”இன்னும் 48 மணி நேரத்தில் திமுக ஆட்சி கலைக்கப்படலாம்” என இப்போது கெடுவைக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஆளுநருடனான மோதல்தான் ஆட்சிக் கலைப்பு பேச்சுக்கு ஆதாரம் என்றாலும் சட்டம் - ஒழுங்கு நிலைமையத்தான் முக்கிய காரணமாக காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக அவ்வபோது பதிவுசெய்து கொண்டே வருகிறது. அடிக்கடி ஆளுநரைச் சந்திக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் புகார் அளிக்கிறார். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமையை அறிந்தும் நான் எப்படி தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று சட்டப்பேரவையில் கூற முடியும்?” என்று ஆளுநர் ரவி, முன்பே கேள்வியெழுப்பியதும் குறிப்பிடத் தக்கது.
ஆக, ஆட்சிக் கலைப்பு பேச்சுக்கான முன்னோட்டம் கடந்த ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. ஆண்டின் தொடக்கத்தில் பேரவையில் உரையாற்றிய ஆளுநர், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில பகுதிகளை தவிர்த்துவிட்டு வாசிக்க, அதற்கு முதல்வர் எழுந்து நேரடியாக பதில் சொன்னார். இதை ஏற்கமுடியாமல் பேரவையைவிட்டு ஆளுநர் அவசரமாய் வெளியேறினார். அப்போது ஆளுநர் - திமுக மோதல் தீவிரமடைந்தது. அப்போதும் ஆளுநர் டெல்லி சென்றார். திமுக ஆட்சிக்கு சிக்கல் வரலாம் என்கிற பேச்சு அப்போதும் எழுந்தது. ஆளுநரை திமுக அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்லி பாஜக-வினர் அரசியல் சாசனத்தின் ஆட்சிக் கலைப்பு ஷரத்தான ‘#Article356’ என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர்.
அடுத்ததாக, ”தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும்” என்று ஆளுநர் கூறிய விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கொதித்தெழுந்தனர். திமுக பேச்சாளர்கள் மட்டுமல்லாது கட்சியின் சீனியர்களே ஆளுநரை மிகவும் கடுமையாக சாடினர். முதல்வரும் ஆளுநரை வார்த்தைகளால் தாக்கினார்.
அந்த சமயத்தில் டெல்லி சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருப்பதாக முறையிட்டதுடன் தமிழக அமைச்சர்கள் சிலரது ஊழல் பட்டியலையும் அளித்தார். இதையெல்லாம் மேற்கோள் காட்டி, திமுக அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப் போவதாக அப்போதும் பாஜகவினர் கூறினர்.
தற்போது செந்தில் பாலாஜியின் அமைச்சர் பொறுப்பு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு அனுமதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆளுநர் - ஆளும்கட்சி மோதல் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. ஆளுநர் பொய் சொல்கிறார் என்று திமுக தரப்பில் ஆதாரத்துடன் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் எடுபடுகின்றன. அதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை ஆளுநர் மீது திமுக வைக்கிறது.
இந்த நிலையில், ஆட்சிக் கலைப்பு என்ற பேச்சுக்கள் மீண்டும் அலையடிக்கின்றன. “மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தமிழக சட்டமன்றத் தேர்தலையும் நடத்த பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. அதனால் தமிழகத்தில் விரைவில் ஆட்சிக் கலைப்பு உறுதி” என்று பாஜகவினரோடு சேர்ந்து அதிமுகவினரும் ஆறுதல்பட்டுக்கொள்கிறார்கள்.
இது குறித்து திமுக வழக்கறிஞரணியைச் சேர்ந்தவரும், பேச்சாளருமான வெ.கொ.உதயசூரியனிடம் பேசினோம். ”திராவிட மாடலை ஒழிப்பது அவர்கள் நோக்கமாக இருக்கிறது. பாசிச, மதவாத பாஜகவை எதிர்ப்பது எங்கள் வேலையாக இருக்கிறது. அதனால் உருவான நிலைமை இது. ஒரு மணி நேரம் தாமதித்தாலும் ஒரு உயிர் போகிறது என்கிற நிலையிலும்கூட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 50 நாட்கள் காலதாமதம் செய்தவர் அவர். இப்படி தேவையில்லாமல் அவர் செய்யும் கால தாமதங்களை எதிர்த்து இப்படிப்பட்ட ஆளுநர் தேவையா என்ற கேள்வியை நாங்கள் எழுப்பினோம்.
அவர் சனாதனம், பாசிசம், மதவாதம் என்ற பாஜகவின் கொள்கைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தப் பார்க்கிறார். ஆரிய மாடலுக்கு வழிவகுக்கிறார். ஆனால், இங்கு திமுகவின் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை அத்துமீறி கைது செய்தது. அது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதுவரை செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரலாம் என்றுதான் முதல்வர் சொன்னார். ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குகிறோம் என்று ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கிறார். பின்பு அவரே அதை நிறுத்தி வைக்கிறார். இதற்கெல்லாம் அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
ஆளுநர் டெல்லி சென்று திரும்பியிருக்கிறார், ஆட்சியைக் கலைத்து விடுவார் என்பதாக பேசுகிறார்கள். ஆட்சியைக் கலைக்கும் விதமான சூழல் தமிழ்நாட்டில் எங்கும் நடக்கவில்லை. இன்றுகூட முதல்வர் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் தாண்டி அவர்கள் திமுக ஆட்சியைக் கலைப்போம் என்று மிரட்டிப் பார்க்கிறார்கள்.
அப்படியே கலைத்தாலும் கூட நாங்கள் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை என்றுதான் முதல்வர் சொல்லியிருக்கிறார். இப்போது கலைத்தால் மீண்டும் திமுக ஆட்சிதான் வரப்போகிறது. எத்தனை முறை கலைத்தாலும் இனி திராவிட திமுக ஆட்சிதான் அமையுமே தவிர அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்றார் அவர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் 1994-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய உறுதியான தீர்ப்பைத் தொடர்ந்து, மாநில அரசுகளைக் கலைப்பது அத்தனை எளிதல்ல. ஆனாலும் திமுகவை அச்சுறுத்தும் விதமாக ஆளுநர் தரப்பும், பாஜக-வினரும் ஆட்சிக்கலைப்பு என்று பயம்காட்டி வருகிறார்கள்.
இதற்கெல்லாமா பயப்படும் திமுக?