அமித் ஷா மீதான ‘கொலைகாரர்’ அவதூறு... ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு


அமித் ஷா - ராகுல் காந்தி

பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா-க்கு எதிராக, அவதூறு மற்றும் ஆட்சேபகரமான பேச்சை பகிர்ந்ததாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று சுல்தான்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பாஜக தலைவராக அமித் ஷா இருந்தபோது, அவருக்கு எதிரான அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி சிக்கினார். பாஜக நிர்வாகி ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கு உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி - எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நடைபெற்று வருகிறது.

குஜராத் என்கவுன்டரில் கொல்லப்பட்டோர்

2018 மே 8 அன்று கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், அமித் ஷா குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையானது. ”பாரதிய ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாகக் கூறுகிறது, ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை கட்சியின் தலைவராக வைத்திருக்கிறது” என்று ஒருசேர பாஜகவையும் அப்போது அதன் தலைவராக இருந்த அமித் ஷாவையும் ராகுல் காந்தி சாடி இருந்தார்.

அமித் ஷா குறித்து ராகுல் பேசியது ஆட்சேபகரமானது மற்றும் அவதூறு நோக்கமுடையது என்று, ராகுல் காந்திக்கு எதிராக விஜய் மிஸ்ரா என்ற பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்தார். ராகுல் பேச்சுக்கு சுமார் நான்கரை ஆண்டு முன்பாகவே, அமித் ஷா தனக்கு எதிரான ‘குஜராத் போலி என்கவுன்டர்’ வழக்கிலிருந்து முழுமையாக விடுபட்டிருந்தார். இதனால் ராகுல் காந்தியின் அவதூறு பேச்சு அவரை நீதிமன்றத்துக்கு இழுத்தது.

2005-ல் குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, என்கவுன்டர் என்ற பெயரில் அப்பாவிகள் பலரை காவல்துறை மூலம் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அவரை கொல்ல முயன்றவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக சொல்லப்படும் இந்த ’போலி என்கவுன்டர்’ தொடர்பான வழக்கு, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.

ராகுல் காந்தி - அமித் ஷா

‘நாட்டின் மிகப்பெரும் கட்சியின் தலைவராக இருக்கும் அமித் ஷா மீது, அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வெளியான பிறகு, ’கொலைகாரர்’ என பொருள்பட அழைத்தது நியாயமற்றது’ என மிஸ்ரா தரப்பில் வாதிட்டார்கள். இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராவதற்கான சம்மன்களை ராகுல் காந்தி பலமுறை தவிர்த்திருந்தார்.

கடைசியாக ஜன.18 அன்று ஆஜராக வேண்டியிருந்ததில், பாரத் ஜோடோ யாத்திரையை காரணமாக்கி அதனை தவிர்த்திருந்தார். இந்த வழக்கில் இன்று ஆஜரான ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டதில், நிதிபதி யோகேஷ் யாதவ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனை ராகுலின் வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!

x