எடப்பாடி பழனிசாமி காரை வழிமறித்து கதவைத் திறக்க முயற்சி... வாலிபரால் பெரும் பரபரப்பு!


பிடிபட்ட வெங்கடேசன்

சென்னையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்ற காரை தடுத்து நிறுத்தி கதவைத் திறக்க முயன்ற வாலிபரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் செல்லுவதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். இயல் இசை நாடக மன்றம் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒருவர் எடப்பாடி பழனிசாமி காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். அத்துடன் கார் கதவைத் திறக்க முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெங்கடேசன்

அப்போது பின்னால் பாதுகாப்பு வாகனத்தில் வந்த காவலர்கள் ஓடிவந்து அந்த நபரை பிடித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதன்பின்பு எடப்பாடி பழனிசாமி காரில் மீண்டும் தலைமைச் செயலகம் புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அபிராமபுரம் போலீஸார் எதிர்கட்சி தலைவர் காரை நிறுத்தி திறக்க முயன்ற நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (26) என்பது தெரியவந்தது.

மேலும் வெங்கடேசன் தனது சொந்த ஊரில் கோயில் கட்டி வருவதாகவும், அதற்கு நிதி கேட்டு எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க சென்றதும் அவரைச் சந்திக்க முடியாததால் காரை தடுத்து நிறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் பிடிபட்ட வெங்கடேசன், உண்மையில் கோயில் நிதி கேட்டு வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

x