வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!


வைகை அணை திறப்பு

வைகை அணை திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையானது தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நள்ளிரவில் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியை எட்டியதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டுள்ளது.

வினாடிக்கு 2,271 கன அடி நீர் அணையில் உள்ள 7 பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. ஏற்கெனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 3 கட்டங்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 33-வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x