தமிழகத்தில் சட்ட, ஒழுங்கு பிரச்சினை இல்லையென்றும், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளை சரி பார்க்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை அறிவுறுத்தியது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. அதிகாரிகள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் தொடங்கவுள்ளன.
இந்த நிலையில் மண்டலம் வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம், ஒழுங்கு நிலை, வாக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ‘’மக்களவை தேர்தல் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நம்மிடம் தயாராக உள்ளது. ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டு புதிய வாக்காளர்கள் அதிகளவில் வந்துள்ளனர். சட்ட ஒழுங்கு பொறுத்தவரை சிறப்பாக உள்ளது’’ என தெரிவித்தார்.