கண்ணப்பர் திடல் குடும்பங்களுக்கு குடியிருப்பு: பயனாளி பங்கு தொகையில் 3-ல் 2 பங்கை மாநகராட்சி செலுத்த தீர்மானம்


சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்துவந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக வெளியேற்றப்பட்டன. இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் அப்போது தங்க வைக்கப்பட்டனர். அன்றுமுதல் இன்றுவரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் 'இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் யூடியூப் சேனலிலும் வீடியோ செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் 114 குடும்பங்களை அடையாளம் கண்டு, பயோமெட்ரிக் பதிவு செய்தது.

அவர்களுக்கு மூலக்கொத்தளத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால், பயனாளி பங்குத்தொகையாக ரூ.4 லட்சத்து 27 ஆயிரம் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்திவந்தனர்.

இந்நிலையில் கண்ணப்பர் திடலில் வசித்து வரும், அடையாளம் காணப்பட்ட 114 குடும்பங்களின், பயனாளி பங்குத் தொகையில் 3-ல் ஒரு பங்கு செலுத்தினால் போதும். 2 பங்குத் தொகையை மாநகராட்சி நிர்வாகம் செலுத்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

x