திமுக மாவட்ட செயலாளர் வீட்டருகே தொழிற்சங்க நிர்வாகி தீக்குளிப்பு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை


மானகிரி கணேசன்

மதுரை: மதுரையில் திமுக மாவட்டச் செயலாளர் வீட்டருகே ஆவின் தொழிற் சங்க நிர்வாகி நேற்று காலை தீக்குளித்தார்.

மதுரை ஓய்வுபெற்ற ஆவின்ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தின் (எல்பிஎப்) மாவட்ட கவுரவத் தலைவராகப் பொறுப்பு வகிப்பவர் மானகிரி கணேசன்(65). ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் நேற்று காலை8 மணியளவில் பசுமலை அருகேமூலக்கரையில் வசிக்கும் மதுரைமாநகர் மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான கோ. தளபதி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

நடைபயிற்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய எம்எல்ஏவைப் பார்த்ததும் சப்தமிட்ட கணேசன், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலீஸார் கூறும்போது, “மதுரை ஆவின் தொழிற்சங்கத்தில் நீண்ட நாட்களாக பொறுப்பு வகிக்கும் கணேசன், தனக்கு சில உதவிகளை செய்யுமாறு கட்சி நிர்வாகிகளை அணுகியுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. கட்சி நிர்வாகிகள் சிலர் பணம் வசூலித்துமோசடி செய்வது குறித்து தொடர்ந்து புகார் செய்தும், உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்திலும் இருந்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் தொடர்ந்து புகார்கள் அனுப்பியுள்ளார். ஆனாலும், நடவடிக்கை இல்லை என்ற விரக்தியில் புலம்பியுள்ளார். இந்த சூழலில்,அவர் திமுக மாவட்டச் செயலாளர் வீட்டருகே தீக்குளித்துள்ளார்.

ஏற்ெகனவே, கடந்த 6 மாதத்துக்கு முன்பு சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்குமுன்பு, தமிழக ஆளுநரை மாற்றக் கோரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று, உயிர் தப்பினார். நேற்று மீண்டும் தீக்குளித்துள்ளார். இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்றும் விசாரித்துவருகிறோம்” என்றனர்.

x