சரபங்கா திட்டம் பெயரில் மேட்டூர் அணைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு 


மேட்டூர் அணையில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய குழுவினர் நேரில் பார்வையிட்டனர். 

மேட்டூர்: “எந்த அனுமதியும் இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக மேட்டூர் அணையை இன்றைக்கு ‘சரபங்கா’ திட்டம் என்ற பெயரில் உடைத்து இருக்கிறார்கள்,” என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ராசிமணல் அணை கட்டுவதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்துக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து இரு மாநில விவசாயிகள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர்நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து, தமிழ்நாடு காவிரி விவசாயி சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், கர்நாடகா விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் குருபரசாந்த குமார், தேசிய தென்னிந்திய நதிகள் இனிப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க உயிர் மட்ட குழு உறுப்பினர் சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று (ஆக.29) மேட்டூர் அணையை பார்வையிட்டனர்.

பின்னர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மேட்டூர் அணையின் கொள்ளளவை உயர்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவெடுக்க இயலாத நிலை உள்ளது. அணையின் கொள்ளளவை உயர்த்தவும், தூர்வாரவும் தமிழக அரசிடம் முறையிட வேண்டும். தென் மாநிலங்களுக்கு இடையே நீராதாரம் பிரச்சினை உள்ளது. நீர் ஆதார உரிமைகளை பாதுகாப்பதற்கு தென்னிந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு குழுவை விவசாயிகள் அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என முடிவு எடுத்திருக்கிறோம்.

கர்நாடகம் - தமிழகம் இடையே மேகேதாட்டு அணை கட்டினால் ஏற்படும் பாதிப்புகளையும் பேரழிவுகளையும் எடுத்துரைத்து, ராசிமணல் அணை கட்டுவதால் கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் ஏற்படக்கூடிய பயன் குறித்து விரைந்து மாண்டியாவில் கூட்டம் நடத்துவதற்கு முடிவெடுத்திருக்கிறோம். அணையின் பாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நீர் ஆதார திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உலகத்தில் எந்த நாட்டிலும் அணையை உடைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேட்டூர் அணையின் கரையை உடைத்து சரபங்கா திட்டத்தைக் கொண்டு செல்வதற்குத் தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

16 கண் மதகு கதவுக்கு வெளியே செல்லும் நீரை, நீரேற்று நிலையங்கள் மூலமாக கொண்டு செல்ல முடியுமோ? அதனை கொண்டு செல்வதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதுபோன்று செயல்படுத்துகிறோம் என்கிற பெயரில் எந்த அனுமதியும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக மேட்டூர் அணையை இன்றைக்கு சரபங்கா திட்டம் என்கிற பெயரில் உடைத்து இருக்கிறார்கள். அணையின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமை மீறப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும். தமிழகத்தை துண்டாக்கும் முயற்சி என்ற அடிப்படையில் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.

சரபங்கா திட்டம் என்ற பெயரில் மேட்டூர் அணையை உடைத்து இருப்பதால் பல்வேறு நிதிகள் முடக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வெளிப்படையாக விவாதிக்க முடியாது. அணையின் கரையோரப் பகுதியில் இருந்து தண்ணீரை எடுக்க அனுமதி இல்லை. அணை உடைக்கப்பட்டிருக்கிறது என்பதை அணையின் கரையில் இருந்து நான் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளேன். எந்த நேரத்திலும் என்னை அழைத்தாலும் அணை உடைக்கப்பட்டு இருப்பதை நிபுணர் குழுவுடன் ஆய்வு செய்ய தயாராக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: “தேர்தல் வந்தால் அரசியல்வாதிகள் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு எங்களை அடிமையாகத் தான் பார்க்கிறார்கள். தமிழகத்தை வெள்ளநீர் வடிகால் மாநிலமாக தான் பார்க்கிறார்கள். மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு உரிமை கிடையாது.

ராசி மணலில் அணை கட்டினால் கர்நாடகாவுக்கு குடிநீரும் எடுத்துக் கொள்ளலாம் தமிழகத்தில் ஒரு போக சாகுபடியை முழுமையாகவும் செய்ய முடியும். மேட்டூர் அணை கொள்ளளவான 93 டிஎம்சிஏ-ஐ வைத்துக் கொண்டு டெல்டா பகுதியில் விவசாயத்தை செய்ய முடியாது. கர்நாடகா அரசு மாதாந்திர நீர் பங்கீட்டில் வழங்காததை திமுக, அதிமுக கேட்கவில்லை,” என்று அவர் கூறினார்.

x