புதுச்சேரி: மின் கட்டண உயர்வுக்காக ஒரே நாளில் தனித்தனியாக போராட்டங்களை இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது. திமுக தனியாக போராட்டம் தலைமைச்செயலகம் முன்பு நடத்துகிறது. இடதுசாரிகள்-விசிக இணைந்து போராட்டம் மின்துறை முன்பு நடத்துகின்றனர். காங்கிரஸ் இதுவரை மவுனம் காத்துள்ளது.
தமிழகம், புதுவையில் கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முதல் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி நீடித்து வருகிறது. தமிழகத்தில் இந்த கூட்டணி 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெரும் வெற்றியை கண்டுள்ளது. அதே நேரத்தில் புதுவையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதில் திமுக மட்டும் 6 எம்எல்ஏக்கள் பெற்று எதிர்கட்சியானது.
ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு 2 எம்எல்ஏவும், கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளுக்கு எம்எல்ஏக்கள் இல்லை. தமிழக அளவில் அமைக்கப்பட்ட இந்த கூட்டணி பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் புதுவையில் தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திமுக புதுவையிலும் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என விரும்புகிறது. அதே நேரத்தில் புதுவையில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் தனது தலைமையை தக்கவைக்க போராடுகிறது.
எனினும் கடந்த மக்களவைத் தேர்தலை சந்திக்கும்போது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஆளும் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியை எதிர்த்தனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மின்துறை தனியார்மயம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியமார்க்கெட் கட்டுமான பணிக்கு எதிர்ப்பு ஆகியவற்றுக்கு ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் வென்றது.
தேர்தலுக்குப் பிறகு தற்போது கூட்டணியுள்ள கட்சிகள் தனித்தனியாக போராட்டத்தை நடத்தவுள்ளன. புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கண்டித்து வரும் 2ம் தேதி திமுக தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
அதே நாளில் இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதுவரை காங்கிரஸ் எந்த போராட்ட அறிவிப்பும் வெளியிடவில்லை. இண்டியா கூட்டணிக்கட்சிகள் தனித்தனியாக போராட்டத்தை நடத்துவதை அரசியல்வட்டாரங்கள் உற்றுநோக்குகின்றன.
இதுபற்றி இண்டியா கூட்டணி தரப்பில் விசாரித்தபோது, "தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் காய் நகர்த்த தொடங்கியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் இடத்தை சட்டப்பேரவையில் இடம் பெற இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விரும்புகின்றன. குறிப்பாக சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அதற்கான வேலைகளையும் துவங்கியுள்ளன. இதனால் தங்களின் பலத்தை காட்டும் வகையில் மக்கள் போராட்டங்களை தனித்தனியாக நடத்துகின்றனர்." என்றனர்.