தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் 50% எம்பிபிஎஸ் இடங்களை கோட்டைவிட்ட புதுச்சேரி அரசு!


புதுச்சேரி: இம்முறையும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 50 சதவீத எம்பிபிஎஸ் இடங்களை புதுச்சேரி அரசு பெறவில்லை. இதனால் அரசு ஒதுக்கீட்டுக்கான 85 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோயுள்ளது.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இந்தாண்டு 371 எம்பிபிஎஸ் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக நிரப்பப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பல் மருத்துவம் உள்ளிட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன்படி, தற்போது எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை இறுதி செய்து, அரசு வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 180 எம்பிபிஎஸ் இடங்களில் 131 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 27 சீட்களும் என்ஆர்ஐ கோட்டாவுக்கு 22 சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்திற்கு 98 சீட்கள், காரைக்கால் 24 சீட்கள், ஏனாம் 4 சீட்கள், மாகி 5 சீட்கள் என எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லுாரிகளை பொறுத்தவரை பிம்ஸ் 57, மணக்குள விநாயகர 92, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி 91 என மொத்தம் 240 எம்பிபிஎஸ் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இந்தாண்டு பெறப்பட்டுள்ளன. இம்முறையும் 50 சதவீத எம்பிபிஎஸ் இடங்களை அரசு பெறவில்லை.

ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவக் கல்லுாரியில் 131, மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகளிலும் சேர்த்து 240 என மொத்தம் 371 எம்பிபிஎஸ் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இந்தாண்டு சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 33 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும்.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் ஜெயபிரகாஷ், செயலர் பிரவீண் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3 தனியார் மருத்துவக் கல்லூரி 4 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் என சுமார் 9 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 1,500-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் குறிப்பாக மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 650 இடங்கள் உள்ளன.

அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர, தெலங்கானா மற்றும் பாஜக ஆளக்கூடிய வட மாநிலங்களிலும் கூட தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து 60 சதவீத முதல் 80 சதவீத இடங்களை அரசு இடங்களாக கேட்டு பெறப்பட்டு வருகிறது. ஆனால், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 50 சதவீத இடங்களை கூட தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து பெறவில்லை.

மொத்தம் 325 இடங்களை பெறாமல் 240 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இது மாநில உரிமையை தனியாருக்கு தாரை வார்க்கும் செயல். இதனால் 85 ஏழை மாணவ - மாணவியரின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும். 50 சதவீத இடம் தர மறுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சலுகைகளை பயன்படுத்தி அரசுக்கு இடம் தராத நிகர்நிலைப் பல்கலைக்கழக உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்” என்று ஜெயபிரகாஷ் கூறினார்.

x