"தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட்டும், விருதுநகர், சேலத்தில் ஜவுளிப் பூங்காவும் அமைக்கப்படும்" என்று 2024-25ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, ‘தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி' என்ற தலைப்பில், தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து சட்டப் பேரவையில் அவர் பேசியதாவது:
"தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் ரூ.120 கோடியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ரூ.2483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 2.08 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும். மதுரையில் 2500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும். தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். மகளிர் இலவச பேருந்து சேவையான விடியல் பயணத் திட்டம், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும். பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும். தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும்.
சென்ன, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆயிரம் இடங்களில் இலவச ஃவைஃபை சேவை வழங்கப்படும். 2025 டிசம்பரில் சென்னை பூவிருந்தவல்லி - கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.”
இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.