மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி; கோவையில் கலைஞர் நூலகம்: பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கோவையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்" என்று, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, ‘தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி' என்ற தலைப்பில், தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து, சட்டப் பேரவையில் பேசிய அவர்,

"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் இலவச பேருந்து ‘விடியல் பயணம்’ திட்டத்துக்கு இந்த ஆண்டில் ரூ.3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கோவையில் கலைஞர் பெயரில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும். பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கலைஞர் நூலகம்

கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x