தெருவில் சுற்றும் மாடுகளால் தொல்லை: ஜல்லிக்கட்டு வீரர்களை களமிறக்கிய மதுரை மாநகராட்சி!


மதுரை: மதுரை மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க, பணியாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதால் தற்போது பிரத்யேக பயிற்சி பெற்ற மதுரை, திருச்சியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்களை களமிறக்கி இருக்கிறது மாநகராட்சி.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் கேட்பாரற்ற மாடுகளும், கன்றுகளும் அதிகளவு சுற்றித் திரிகின்றன. கோரிப்பாளையம், ஆரப்பாளையம், பழங்காநத்தம், பெரியார் பஸ் நிலையம், ஐய்யர் பங்களா, மாட்டுத் தாவணி போன்ற முக்கிய போக்குவரத்து சந்திப்பு சிக்னல்களில் கூட மாடுகள், போக்குவரத்திற்கு மிகப்பெரிய தொந்தரவாக இருக்கின்றன. அந்த மாடுகளை போலீஸார் விரட்டிவிட்டு போக்குவரத்தை சீரமைக்கிறார்கள்.

கே.கே.நகர் ரவுண்டானா முதல் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை, நத்தம் நான்கு வழிச்சாலை, அழகர் கோயில் சாலை போன்ற நகரின் முக்கிய சாலைகளில் மாடுகள் திடீரென்று குறுக்காக பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர், கீழே சறுக்கி விழுந்து படுகாயம் அடைகின்றனர். சிலர் அவ்வப்போது மாடுகள் முட்டியும், வாகனங்களில் இருந்து விழுந்தும் படுகாயம் அடைகிறார்கள். கடந்த 2 வாரத்திற்கு முன்பாகக் கூட ஒத்தக்கடையில் மாடு முட்டி, மகளைப் பார்க்க வந்த தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாடுகளை பிடித்து மாநகராட்சி நகர் நல ஆய்வாளர்கள் அபராதம் விதித்தாலும், மாடுகள் சாலைகளில் திரிவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மாடுகளை பிடிக்க மாநகராட்சி பணியாளர்களை அனுப்பும்போது, அவர்கள் பணியும் அன்றைய நாளில் பாதிக்கப்படுவதோடு அவர்களால் முறைப்படி மாடுகளை பிடிக்கவும் முடியாமல் போகிறது. சில மாடுகள் அவர்களையும் முட்டி படுகாயம் ஏற்படுத்தி விடுகின்றன.

மாடுகளை பிடிக்க அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்த மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாடுகளை பிடிக்க முறையாக பயிற்சி பெற்ற ஜல்லிக்கட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளார். அந்த அடிப்படையில் மதுரை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகளை பிடிக்க ஆர்வமுள்ள தலை சிறந்த 10 ஜல்லிக்கட்டு வீரர்களை மாநகராட்சி நிர்வாகம் தற்போது களமிறக்கி விட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் கூறுகையில், "மாடுகளை பிடிப்பது, அதனை பராமரிப்பது மாநகராட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால், மாடுகளை பிடித்து பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க மதுரை, திருச்சியை சேர்ந்த பிரத்தியேகப் பயிற்சி பெற்ற ஜல்லிக்கட்டு வீரர்களை மாநகராட்சி அனுப்புகிறது.

10 பேர் கொண்ட இக்குழுவினர் 100 வார்டுகளுக்கும் தினமும் செல்கிறார்கள். அப்போது தெருக்களில் திரியும் மாடுகளை பிடித்து செல்லூரில் உள்ள மாநகராட்சி செட்டில் அடைத்து பராமரிக்கிறார்கள். ஒரு மாட்டைப் பிடிக்க ரூ.2000 கட்டணம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த மாட்டை பிடித்து செட்டிற்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் மாடுகளை பிடிக்கிற இடத்தில் உரிமையாளர் வந்து முறையிட்டால் அவர்களுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.3000 அபராதமும், கன்றுக்கு ரூ.1,500 அபராதமும் விதித்து மாடு ஒப்படைக்கப்படுகிறது.

செட்டில் கொண்டு வந்து பராமரிக்கும்போது ஒரு மாட்டிற்கு ரூ.5,000, கன்றுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. உரிமையாளர்கள் தேடி வராதப்பட்சத்தில் அந்த மாடுகளை கோசாலைக்கு அனுப்பவும் அல்லது டெண்டர் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாடுகளை பிடிப்பது மாநகராட்சி நோக்கமில்லை, மாடுகள் சாலைகளில் திரியாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14 நாளில் இதுவரை 60 மாடுகளை இந்த ஜல்லிக்கட்டு குழுவினர் பிடித்துள்ளனர். மாடுகளை பிடிப்பதில் ஜல்லிக்கட்டு வீரர்கள் கை தேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று உதவி நகர்நல அலுவலர் கூறினார்.

x