ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று வழங்கி பாராட்டு: அசத்தும் கம்பம் போலீஸார்!


கம்பத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று வழங்கி பாராட்டிய போலீஸார்.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டிய போக்குவரத்து காவல்துறையினர் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினர்.

கம்பத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை வகிக்க, உதவி ஆய்வாளர்கள் கார்த்திக் ராஜா, சக்கப்பன், ‘அன்பு அறம் செய்’ அமைப்பின் நிறுவனர் சுருளிப்பட்டி அன்பு ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ரா.செங்கோட்டு வேலன் கலந்துகொண்டார். கம்பம் அரசு மருத்துவமனை முன்பு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி தலைக்கவசத்தின் அவசியம் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேசமயம் விதிகளை மதித்து முறையாக தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை பாராட்டி அவர்களுக்கு கதராடை போர்த்தப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு மரக்கன்றுகளும் பரிசாக வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x