புதுச்சேரி: கால்நடை மருத்துவர்கள் நமது மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் அரிய பொக்கிஷமாக இருக்கும் பசுக்களை பாதுகாக்க முயற்சிகளை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மறுவுருவாக்க ஆராய்ச்சி மையம் மற்றும் கால்நடை மருத்துவ சிகிச்சை வளாகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கலந்துகொண்டு மறுவுருவாக்க ஆராய்ச்சி மையத்தையும், கால்நடை மருத்துவ சிகிச்சை வளாகத்தையும் திறந்து வைத்தார். வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் விழாவுக்கு தலைமை தாங்கி கல்வெட்டுப் பலகையைத் திறந்து வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பேசியதாவது: "ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி கல்லூரியின் பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கத்தில் நடத்தப்பட்டது. இங்கு ஆடிட்டோரியம் இல்லாததால் தான் அங்கு நடத்தப்பட்டது. ஆகவே, ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் இருந்து உடனடியாக இங்கு ஆடிட்டோரியம் ஒன்றை கட்டித் தர வேண்டும் என துறை அமைச்சருக்கு தான் கோரிக்கை வைக்கின்றேன்.
தலைமைச் செயலர் சரத் சவுகான், ராஜூ போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வந்த பிறகு தான் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்துத் திட்டங்களும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைமைச் செயலர் நமக்கு திட்டங்களை வழி வகுத்துக் கொடுத்ததன் காரணமாகத் தான் கடந்த நிதியாண்டை விட கூடுதலாக ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை இந்தாண்டு முதல்வர் தாக்கல் செய்தார்.
3 ஆண்டுகள் பல்வேறு திசைகளில் அதிகாரிகள் இருந்தாலும் கூட தலைமைச் செயலர் வந்தபிறகு இன்றைக்கு மாறுபட்ட கோணத்தில் அரசு செல்கிறது. அதனால் நல்ல பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தின் தேவைகள் முதல்வர் தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்கு உறுதுணையாக அதிகாரிகளும் இருக்கின்றனர். ஒருகாலத்தில் தமிழகத்துக்கு பால் வழங்கிய மாநிலம் புதுச்சேரி. இப்போது நமக்கு தேவையானது 2 லட்சம் லிட்டர் பால். ஆனால் நம்முடைய மாநிலத்தில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் பால் தான் கிடைக்கிறது.
மீதமுள்ள பாலை ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்குகின்றோம். ஆகவே, கால்நடை மருத்துவர்கள் நமது மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் அரிய பொக்கிஷமாக இருக்கும் பசுக்களை பாதுகாக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். இங்குள்ள நாட்டு மாடுகளின் பால் வேறு எங்கும் கிடைக்காது. ஆனால், அந்த மாட்டினமே புதுச்சேரியில் இல்லை.
இந்திய கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை ஒத்த கால்நடைகளை மருத்துவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதன்மூலம் அவற்றை பாதுகாக்கும் பொறுப்பு மருத்துவர்களாகிய உங்களுக்கு இருக்கிறது. ஆராய்ச்சி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து, புதுச்சேரிக்கு பெருமைக்கு சேர்த்து அரசுக்கு நல்ல பெயரை பெற்றுத் தர வேண்டும்" என்று செல்வம் கூறினார்.
தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான், அரசுச் செயலர் (கால்நடைப் பராமரிப்பு) ராஜூ, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர், நிறுவனத்தின் புல முதல்வர் டாக்டர் செழியன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.