நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி: குன்னூரில் அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!


குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் பங்கேற்றனர். முதற்கட்டமாக ரூ.27 லட்சம் மதிப்பில் 562 மாணவ - மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், "அகில இந்திய அளவில் மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தில் உள்ளது. இதேபோல பள்ளி மாணவ - மாணவியருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, மாணவ - மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிதியாண்டில் நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.1.92 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியருக்கு வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.8.62 கோடி மதிப்பில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்காக நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கோட்டாட்சியர் சதீஷ், குன்னூர் நகராட்சி துணைத் தலைவர் வாசிம் ராஜா, நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுனிதா நேரு, ஒன்றிய திமுக செயலாளர் பிரேம்குமார், திமுக நிர்வாகிகளான செல்வம், உமா, வினோத் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கையும் விவசாயின் பயன்பாட்டிற்காக அமைச்சர் ராமச்சந்திரன் திறந்துவைத்து பார்வையிட்டார்.

x