மதுரையில் எய்ம்ஸ் எப்போது கட்டி முடிப்பீர்கள்? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி


மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிப்பீர்கள்? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி என்று உத்தரவிடக்கோரி பாஸ்கர் என்பவர் பொது நலன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? எப்போது கட்டி முடிப்பீர்கள்? என மத்திய அரசு தரப்புக்கு நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியது.

அதற்கு, கரோனா பொதுமுடக்கத்தை மத்திய அரசு காரணம் காட்டிய நிலையில், கரோனா 2022ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதனைக் காரணம் காட்டாதீர்கள் என்று கண்டித்ததுடன், மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் 2026-ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்று மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப். 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x