மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது


சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே .பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |

சென்னை: சென்னை மாநகராட்சி பணிகள் தனியார்மயமாக்குவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சியில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சியில் உள்ள பல்வேறு துறை பணிகளும் தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், தற்போது ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட குழு சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில், அனுமதி இன்றி ரிப்பன் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “சென்னை மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாகவே தூய்மைப் பணி தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கு பாதிப்பு என்று வரும்போது மக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராடி வருகிறோம். மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவது ஆபத்தானது. சாதாரண உழைப்பாளி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

x