தஞ்சை, சென்னையில் புதிய அருங்காட்சியகங்கள்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்


சென்னை: சென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அருங்காட்சியகங்கள் துறை சார்பில்,நேற்று சென்னை அருங்காட்சியகத்தில் ‘பண்பாடு - ஒரு மீள்பார்வை’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: கடந்த 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள நிலப் பரப்பை ஆங்கிலேயர்கள் வாங்கினார்கள். அந்த நாள் இதுவரை சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னையின் 385-வது பிறந்தநாளை பெருமையாக அருங்காட்சியகம் கொண்டாடி வருகிறது.

சென்னை 385 ஆண்டு மட்டும் பழமையானதல்ல; மேலும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந் தது என்பதை மெய்ப்பிக்கும் வித மாக பழமை வாய்ந்த ராபர்ட் ஃபுரூஸ் ஃபுட் கண்டெடுத்த பழையகற்காலக் கருவிகள், 2000 ஆண்டுபழமை வாய்ந்த கீழ்ப்பாக்கம் அகழாய்வில் கிடைத்த மட்கலன்கள் ஆகியன சிறப்புக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியில் எம்டன் கப்பல் சென்னைமீது எறிந்துவிட்டுச் சென்ற வெடிகுண்டுகளின் எச்சங்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத் துறையை மேலும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாபெரும் சோழர் அருங்காட்சியகத்தை தஞ்சாவூரில் அரசு அமைக்க உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பை அறியச்செய்கின்ற வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் ஒன்றை சென்னை ஹுமாயூன் மஹாலில் அமைக்க உள்ளது.

மேலும், வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் சேலம், விருதுநகர் அருங்காட்சியகங்களுக்கு புதியகட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி அருங்காட்சிய கங்களுக்கு சுமார் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நடப்புஆண்டில் வேலூர், கடலூர் அருங்காட்சியகங்களை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், சுற்றுலாத் துறை செயலர் பி.சந்திரமோகன், அருங்காட்சியக இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x