நிதி இல்லையா? நாங்க பிச்சை எடுத்து தருகிறோம்! தேனி நகராட்சி கவுன்சிலர்களின் போராட்டத்தால் பரபரப்பு


தேனி நகராட்சியில் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லை என நகராட்சி தலைவர் கூறியதை கண்டித்து தேனி நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர நகர் மன்ற கூட்டம் தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் 33 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த 6 கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் எந்த திட்டமும் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். தொடர்ந்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அவர்கள் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி நகராட்சி

மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த நகராட்சியில் நிதி இல்லை என கூறியதால், பொதுமக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்த முடியவில்லை எனக் கூறி, பொதுமக்களே பிச்சை இடுங்கள் என்று முழக்கங்களை எழுப்பி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் நமக்கு நாமே திட்டத்தில் செயல்படுத்த கூறுவதாக வார்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டாக முன்வைத்தனர்.

போராட்டம்

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடம், நகர்மன்ற தலைவர் ரேணுகா பிரியா, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்ட அரங்கில் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அழைத்து சென்றார். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

x