முதல்வர் கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைகிறது. அழகிரி மீண்டும் கட்சியில் இணைக்கப்படுகிறார் என்ற செய்திகள் நேற்று முதல் அதிகம் பேசப்படுகிறது.
கருணாநிதியின் கோபக்கார மகனான மு.க.அழகிரி, கருணாநிதி இருந்தபோது திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு தென் மாவட்டங்கள் முழுவதும் கட்டுக்குள் வைத்திருந்தார். மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் தனது தந்தையுடனான மோதலைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மு.க.அழகிரி நீக்கப்பட்டார்.
அதிலிருந்து மீண்டும் திமுகவில் இணைவதற்கு அழகிரி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் அளிக்கவில்லை. அதற்கு மு.க.ஸ்டாலினே காரணம் என சொல்லப்பட்டது. கட்சியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து விடும் என்று கருதி மு.க.ஸ்டாலின் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. கருணாநிதியின் மறைவுக்கு பின் இருவரும் சந்தித்துக் கொள்வது கூட தவிர்க்கப்பட்டது.
அழகிரிக்கு மாறாக கனிமொழியை தென் மாவட்டத்திற்கு அனுப்பி தூத்துக்குடி தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார்கள். அழகிரி சென்னையில் ஊர்வலம் நடத்தியும் கூட திமுகவில் அவரை இணைப்பது குறித்து ஸ்டாலின் இசைவு தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கு அவர்களின் சகோதரி செல்வி தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.
இந்தநிலையில் தயாளு அம்மாளின் 90-வது பிறந்தநாள் நேற்று அவரது உறவினர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கு மனைவி, மகன் சகிதமாக அழகிரி வந்திருந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினும் வரவழைக்கப்பட்டு இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். பல வருடங்களுக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொண்டதோடு பரஸ்பர நலமும் விசாரித்துக் கொண்டனர்.
இதன் அடுத்த கட்டமாக அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார் என்று சொல்கிறார்கள். இதற்காக விரைவில் மதுரையில் பிரம்மாண்டமான இணைப்பு விழா நடைபெற உள்ளதாம். பழையபடி தென் மாவட்டங்களை அழகிரி கவனித்துக் கொள்ள இருக்கிறார் என்கிறார்கள். கட்சியில் தனது மகன் தயாநிதிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அழகிரியின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.