விரைவு போக்குவரத்து கழகத்துக்கு இருக்கை, படுக்கை வசதியுடன் 150 புதிய பேருந்துகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்


அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில், அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே .சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன் , மு.சண்முகம், துணை மேயர் மு.மகேஷ் குமார், போக்குவரத்துத் துறை செயலாளர் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.90.52 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ள 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் முதல்கட்டமாக, பிஎஸ்-6 ரகத்தை சேர்ந்த ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன. இப்பேருந்துகள் இயக்க தொடக்க விழா, சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் நேற்று நடந்தது. இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், பேருந்தில் ஏறி பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், மு.சண்முகம், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், மேலாண் இணை இயக்குநர் செ.நடராஜன், விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேருந்துகளின் சிறப்பம்சங்கள் குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: புதிய பேருந்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

நாட்டிலேயே முதல்முறையாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் சொகுசு பயணத்துக்காக முன்புற ஏர் சஸ்பென்ஷன் (Air Suspension) வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர், குழந்தைகளுக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. படுக்கைகளுக்கு இடையே அதிகமான இடவசதி, தடுப்பு உள்ளது.

பயணிகளின் உடைமைகளை வைக்கவும், சரக்கு பார்சலுக்காகவும் போதிய இடவசதி உள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் தீயை முன்கூட்டியே திறம்பட ஊகித்து அணைக்கும் வகையில் எஃப்டிஎஸ்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இருக்கை, படுக்கைக்கும் தனித்தனியே சார்ஜிங் வசதி, மின்விசிறி, பயணிகள் பாதுகாப்புக்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அபாய ஒலி எழுப்பி (SOS), பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க ஒலிபெருக்கி, டிஜிட்டல் கடிகாரம் ஆகியவையும் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

x