முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிபிஐ தகவல்


மதுரை: சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் மனு தாக்கல் செய்தார்.

அதில், டிஎஸ்பி காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில், டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சிபிஐ எஸ்.பி. என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு எஸ்.பி.க்கு அதிகாரம் இல்லை.

சிபிஐ அதிகாரிகள் என் வீட்டில்நுழைந்து, பொருட்களைப் பறிமுதல் செய்தது சட்டவிரோதம். இது என் மீதான நன்மதிப்பைக் கெடுப்பதாகவும், என் அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது. நீதிக்கு எதிராக நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். நான் எங்கும் தலைமறைவாகவில்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் பொன் மாணிக்கவேல் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், "உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே மனுதாரர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றம் நடந்திருக்க முகாந்திரம் இருப்பதால், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தால்தான், சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும், அவருக்கும் உள்ள தொடர்புகுறித்து தெரியவரும். இந்த சூழலில், பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கினால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிடப்பட்டது. பின்னர், மூடி முத்திரையிட்ட அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

பழிவாங்கும் நோக்கில்... பொன் மாணிக்கவேல் தரப்பில், தன்னைப் பழி வாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நீதிபதி விசாரணையை ஆக. 29-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார்

x