விறுவிறுப்படையும் விஜயின் அரசியல் மூவ்; பக்கபலமாக இருப்பது பாஜகவா?


மாணவர்களுக்கு பரிசு வழங்கும் மேடையில் விஜய்

தற்போது 'லியோ' படத்தில் நடித்துவரும் நடிகர் விஜய் அதை முடித்துவிட்டு அடுத்து வெங்கட்பிரபுவுடன் இணைந்து தனது 68-வது படத்தில் நடிக்கிறார். இதுவும், விரைவில் விஜய் அரசியல் அரிதாரம் பூசவிருக்கிறார் என்பதும் ஊரறிந்த செய்திதான். ஆனால், இந்த இரண்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது என்பதுதான் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது ஹாட் டாபிக்!

2024 மே மாதத்திற்குள் கைவசமிருக்கும் படங்களை முடித்துவிட்டு விஜய் சிறிது காலம் ஓய்வெடுக்க திட்டமிடுவதாக முதல் கட்டமாக தகவல்களை கசியவிட்டுள்ளனர். ஓய்வெடுக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், அந்த ஓய்வுக் காலத்தில் தனது அரசியல் களத்துக்கான வேலைகளை விஜய் வேகப்படுத்த இருக்கிறார் என்கிறார்கள். இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பு மற்றும் களப்பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அவர் வகுத்திருக்கிறாராம்.

தந்தை ஒருபக்கம் தன்னை அரசியலுக்குள் தள்ளினாலும் தனது படங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாகவே விஜய் அரசியலை நோக்கி தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக என சகட்டுமேனிக்கு அனைத்துக் கட்சிகளாலும் கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார் விஜய். இதுவே ஒருகட்டத்தில் அவரை காங், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நோக்கி நகரவைத்தது. ஆனால், அந்த முயற்சிகள் கைகொடுக்காத நிலையில் அமைதியாக இருந்தவர், தற்போது தனக்கான தருணம் அமைந்திருப்பதாக அவதானித்திருக்கிறார்.

இதுவரை, தான் அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் விஜய் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் அரசியலை நோக்கியே நகர்கிறது. தனது, மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அடிக்கடி சந்திப்பு, மக்கள் நலத்திட்டங்கள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது, அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக பரிசு, 234 தொகுதிகளிலும், பசித்தவர்களுக்கு உணவளித்தல் என மக்களுடன் தொடர்புடைய நேரடியான செயல்பாடுகளில் இறங்கியிருக்கும் விஜய் இன்னொருபக்கம், அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளத்தையும் அழுத்தமாக அமைத்துக்கொண்டே வருகிறார்.

விஜய்க்கு அரசியல் பாதை அமைப்பதற்காக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அது களத்தில் இறங்கி முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அந்தக் குழுவினர் தமிழக அரசியல் நிலவரம் குறித்த துல்லியமான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். 1957 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தல் வரையிலுமான அனைத்துத் தேர்தல்களிலும், அப்போதைய களநிலவரங்கள், அரசியலின் போக்கு, தேர்தல் முடிவுகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்துவரும் அந்தக்குழு, அதுகுறித்த அறிக்கையை விரைவில் விஜயிடம் வழங்கும் என்கிறார்கள்.

அத்துடன், தமிழக அரசியல் வரலாற்றை 1960, 1980, 2000 என மூன்று கட்டங்களாகப் பிரித்து அந்தந்த காலகட்டங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து விரிவான அறிக்கை தயார்செய்யப்பட்டு வருகிறதாம். தமிழகம் பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் குறித்த விவரங்களைத் தொகுத்து வருகிறது ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழு. சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் உட்காரும் சமயத்தில் இவை அனைத்தையும் ஆழமாக படிக்கவிருக்கிறார் விஜய்.

இப்போதிருக்கும் வழக்கமான அரசியல் கட்சிகளைவிட விஜய்க்கான அரசியல் கட்சியும் அதன் சட்ட திட்டங்களும் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்தும் வரைவு திட்டம் ஒன்றைத் தயாரித்து விஜயிடம் தர தயாராய் இருக்கிறது அதிகாரிகள் குழு.

இத்தனை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு களத்துக்கு வரும் விஜய், கட்சி நடத்த பணத்துக்கு எங்கே போவார் என்ற கேள்வி நிச்சயம் எழும். விஜய்க்கு கைகொடுக்க பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி எழுவதும் இயற்கைதான். இந்தக் கேள்விகளுக்கான ஒரே பதிலாக பாஜக-வை சொல்கிறார்கள். விஜயின் நடவடிக்கைகள் திடீரென வேகமெடுத்திருப்பதன் பின்னணியில் பாஜகதான் இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் அடித்துச் சொல்கிறார்கள்.

மாநிலங்களில் வலுவாக இருக்கும் கட்சிகளின் வலுவைக் குறைக்க அந்தக் கட்சிகளை உடைப்பது அண்மைக்கால பாஜகவின் அரசியல் தந்திரம். அப்படி உடைக்கமுடியாத பட்சத்தில் இன்னொரு கட்சியை வளர்த்தெடுத்து வாக்குகளைப் பிரிப்பது. அந்தக் கட்சி வளர்ந்ததும் அந்தக் கட்சியை பாஜகவுக்குள் இணைத்துவிடுவது பாஜகவின் இன்னொரு உத்தி. அந்த பாணியில் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வலிமையைக் குறைக்க மூன்றாவதாக ஒரு சக்தியை வளர்த்தெடுக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அந்தத் திட்டத்துடன் தான் முதலில் ரஜினியை அரசியல் களத்துக்கு இழுத்தார்கள். சுதாரித்துக்கொண்ட ரஜினி, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார். ரஜினிக்காக உருவாக்கப்பட்ட இடத்தில் இப்போது விஜயை உட்காரவைக்கப் பார்க்கிறது பாஜக. அதனால் தான் விஜயின் அரசியல் பிரவேசத்தை பாஜகவினரே வெகு உற்சாகமாக வரவேற்கிறார்கள். “விஜய் உள்ளிட்ட எந்த நடிகர்கள் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் வரவேற்போம்” என்று பாஜக எம்எல்ஏ-க்களான நயினார் நாகேந்திரனும், வானதி சீனிவாசனும் திருவாய் மலர்கிறார்கள்.

பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விஜய் இருவரும் கைகுலுக்கும் போட்டோவைப் பகிர்ந்து, 'பொதுவாக பாஜக தலைவர்களுக்கு விஜயை பிடிக்காது என்று ஒரு தகவல் இருக்கிறது. அது முற்றிலும் தவறு. நாங்கள் நடிகர் விஜயை நேசிக்கிறோம். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் விஜயும் ஒருவர்' என்று குறிப்பிட்டிருப்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரை பாஜகவில் சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்று சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள், “நடிகர் விஜய் பாஜகவுக்கு பக்கபலமாக இருக்க, அவர்களின் இயக்கத்தில்தான் செயல்படப்போகிறார்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.

விஜயை அரசியலுக்கு இழுப்பதும் அவரை பாஜகவை நோக்கி நகர்த்திச் செல்வதும் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்துதான் என்கிறார்கள். புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் அம்மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். கடந்தாண்டு தொடக்கத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை விஜயை நேரில் சந்திக்க வைத்தார். அப்போது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் அரசியல் பேசினர். தங்கள் இருக்கும் ரங்கசாமி மூலமாக விஜயை தங்கள் தரப்புக்கு ஆதரவாக திருப்ப பாஜக முயற்சிப்பதாக அப்போதே பேச்சு எழுந்தது. அதற்கான காலம் இப்போது கனிந்து கொண்டிருக்கிறது.

2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி கோவை வந்தபோது அவரை தேடிச்சென்று சந்தித்தார் விஜய். பாஜகவுக்கு ஆதரவாக அந்தத் தேர்தலில் விஜய் ரசிகர்கள் களம் இறங்கினர். அதனால் 2024 தேர்தலில் பாஜக பக்கம் நின்றால் எந்த நெருடலும் ஏற்படாது என்று விஜய்க்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுள்ள விஜய், பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கினால் அது வலுவாக இருக்கும் திமுக கூட்டணியின் வாக்குகளை பிரிக்கும் என்பதும் பாஜகவின் கணக்கு.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு உதவினால், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு உதவுவதாக அதாவது தமிழகத்தில் அவரை முன்னிறுத்துவதாக ஒப்பந்தம் பேசுகிறதாம் பாஜக தரப்பு. இப்படி பல்முனை யோசனைகளுக்கு உட்பட்டே விஜய் அரசியல் களத்துக்கு வருகிறார் என்கிறார்கள்.

விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த்

விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து பேச மக்கள் இயக்கப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ”ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் அடிக்கடி அவர்களைச் சந்தித்து வருகிறார் விஜய். எல்லா காலகட்டத்திலும் மக்களுக்கும், மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். கொரோனா சமயத்தில் அவரது சேவைகள் கொஞ்சம் முடங்கிவிட்டன. இப்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.

ஆனாலும், ‘நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று விஜயே நேரடியாக அறிவிக்காத வரையில் எதுவும் உறுதி இல்லை. அதேசமயம், அரசியலுடன் தன்னை தொடர்புபடுத்தி வரும் செய்திகளை விஜய் மறுக்கவுமில்லை. ‘நான் அரசியலுக்கு வரப்போவதில்லை’ என்று அவர் சொல்லவுமிவில்லை.

அதேசமயம், விஜயை பாஜக இயக்குவதாக கூறுவதிலும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதிலும் சிறிதும் உண்மை இல்லை. பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டால் சிறுபான்மையினரை பகைக்க வேண்டி வரும் என்பதை அறியாதவரல்ல விஜய். தமிழகத்தில் பலமிக்க திராவிட கட்சிகளைப் பகைத்துக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட அத்தனை எளிதாக சம்மதிக்க மாட்டார் விஜய்” என்றார்.

விஜயின் அரசியல் பிரவேசம் நடந்துவிட்டால் ‘மாமன்னன்’ உதயநிதியின் எதிர்காலத்துக்கு என்னவிதமான பாதிப்புகள் உண்டாகும் என்று திமுக முக்கியஸ்தர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கியிருப்பதையும் கவனிக்க முடிகிறது.

ஆக, 2024-ல் பாஜகவுக்கு பகடைக்காயாக இருக்கிறாரோ இல்லையோ, 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் நேரடி அரசியலுக்குள் வரும் திட்டத்தில் நிச்சயமாக இருக்கிறார் விஜய். அதற்கு ஆயத்தமாகும் வேலைகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன என்று அவரது ரசிகர்களில் பெருவாரியான வர்கள் சொல்கிறார்கள். - அத்தனை எளிதாக புறந்தள்ள முடியவில்லை!

x