திமுக - பாஜக மோதலால் தமிழகம் பாதிப்பு: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


மதுரை: “திமுக - பாஜக அரசியல் மோதலால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக உசிலம்பட்டி நகர் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி உசிலம்பட்டியில் நடைபெற்றது. நகர செயலாளர் பூமா ராஜா தலைமை தாங்கினார். உறுப்பினர் அடையாள அட்டையை சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தவசி, ஏகேடி ராஜா, தமிழரசன், மாநில நிர்வாகிகள் தனராஜன், உசிலை டாக்டர் விஜயபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாக அதிமுக உள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், விடுதிகளை அரசாணை எண் 40 மூலம் நிர்வாக மாற்றம் செய்ய முயற்சித்தனர். அதிமுக உண்ணாவிரத போராட்டத்தால் திமுக அரசின் இந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்மாவட்ட மக்களுக்கு அதிமுக என்றைக்கும் பாதுகாப்பு அரணாக திகழ்வது நிரூபணமாகியுள்ளது.

இன்றைக்கு தமிழகத்தில் வறுமை ஒழிக்கப்படவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல. திமுக கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றும், மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்றும் கூறினார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை பேருக்கு முதலமைச்சர் வேலை வாய்ப்பை கொடுத்துள்ளார்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் ஒரு இடத்தில் கூட பெறவில்லை. ஆனால் பீகாரும், ஆந்திராவும் ஐந்து இடத்தில் இடம்பெற்றுள்ளது. வட மாநிலங்கள் நிதியை அள்ளி சென்று விட்டன. 40 நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தும் நிதி பெற்று தர முடியாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அதுபோல், தினமும் அரசியல் வசனம் பேசும் அண்ணாமலை, மத்திய அரசை அணுகி நிதி பெற்று தர முடியவில்லை. திமுக-பாஜகவின் இந்த அரசியல் மோதலால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

x