புதுச்சேரி: தொகுதி எம்எல்ஏ-வை அழைக்காமல் நிவாரண நிதிக்கான காசோலையை அளித்தது ஏன் என முதல்வரின் தனிச் செயலரிடம் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் கோபக் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த சிலர் முதல்வர் நிவாரண நிதி பெற விண்ணப்பித்திருந்தனர். அதற்கான காசோலைகளை முதல்வரின் தனிச் செயலர் அமுதன் இன்று அவர்களுக்கு அளித்துள்ளார். இதையறிந்த அத்தொகுதி எம்எல்ஏ-வும் அரசு கொறடாவுமான ஏ.கே.டி ஆறுமுகம் தலைமைச் செயலகத்துக்கு நேரில் சென்று, “தனக்குத் தெரியாமல் தனது தொகுதி மக்களுக்கான முதல்வர் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கியது ஏன்?” என்று கோபமாக கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், "தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து கோடிக் கணக்கில் பணம் செலவழித்து எம்எல்ஏ ஆகியுள்ளேன். அப்படி இருக்கையில் நீங்கள் இங்கே அமர்ந்து கொண்டு தன்னிடமே வேலை காட்டுவது ஏன்? அப்படியானால் முதல்வரின் தனிச் செயலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று எம்எல்ஏ ஆக வேண்டியதுதானே. நிவாரண நிதிக்கான காசோலையை தனக்குத் தெரியாமல் நீங்கள் எப்படி தரலாம்?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
அவருக்கு பதில் சொல்ல முடியாமல் தனிச் செயலர் அமுதன் அவரது உள் அறைக்குள் அமர்ந்துவிட்டார். அதன் பிறகும் பேசிய ஆறுமுகம், "தங்கள் ஆட்களை அறையைவிட்டு வெளியே போகும்படி எப்படிச் சொல்லலாம்? தனிச் செயலர் அமுதன் என்ன முதல்வரா... அல்லது அதற்கும் மேலேயா? இங்கு உட்கார்ந்து கொண்டு வேலை காட்ட வேண்டாம். இனிமேல் நேரடியாக தன்னை அழைக்காமல் தன் தொகுதி மக்களுக்கு நிவாரணத்துக்கான காசோலைகளைத் தந்தால் நடப்பதே வேறு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.