குன்னூர் நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


குன்னூர்: குன்னூர் நகராட்சியில் எஸ்ஏடிபி நிதி உரிய முறையில் செலவு செய்யாததால் நிதி திரும்பிச் சென்றதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்றக் கூட்டத்தில் பிரச்சினையை எழுப்பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் சுசீலா தலைமையில் இன்று நடந்தது. துணைத் தலைவர் வாஷிம் ராஜா, ஆணையர் சசிகலா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மணிகண்டன், ஜாகீர், ராமசாமி, சரவணகுமார், ஜெகநாதன், குருமூர்த்தி ஆகியோர் பேசும்போது, “நகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நடைபெறும் போது, சிலர் ஒப்பந்ததாரர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதால் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே இவர்கள் மீது சட்டபூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் தெரிவித்தனர்.

இதே கோரிக்கையை மற்ற சில கவுன்சிலர்களும் ஆணையரிடம் தெரிவித்தனர். இது குறித்து நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சசிகலா தெரிவித்தார். பின்பு பேசிய திமுக கவுன்சிலர் ஜாகிர், “குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் மாணவ - மாணவியரை நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கவுன்சிலர் மன்சூர் பேசும் போது, “காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் உள்ள பகுதிகளில் குப்பைகளை சரியாக அகற்றாமல் அங்கேயே போடப்பட்டுள்ளதால் இந்த இடத்தில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அந்த பகுதியில் குப்பைகளை எடுக்காமல் வனப்பகுதியில் சென்று குப்பைகளை எடுக்க அனுப்பப்படுகின்றனர். எனவே பணிகளை முறையாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

துணைத் தலைவர் வாசிம் ராஜா பேசும் போது, “நகராட்சியில் உள்ள சில அதிகாரிகள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, நகராட்சி நிர்வாகத்தைக் கெடுக்கும் 3 பேர் குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் சரவணகுமார், குருமூர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேர், “எஸ்ஏடிபி திட்டத்தில் இருந்து வந்த நிதியை 30 வார்டுக்களுக்கும் செலவு செய்யாமல் மீண்டும் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது” என அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆணையர் சசிகலா, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும் கவுன்சிலர்கள் வெளியேறாததால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன்ற கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

x