திருப்பூரில் பல இடங்களில் நில அதிர்வை உணந்ததாக பொதுமக்கள் அச்சம்


திருப்பூர் - காங்கயம் சாலை நாச்சிபாளையத்திலுள்ள பல்பொருள் அங்காடியில் நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் மற்றும் கடையில் வேலை பார்க்கும் சிறுவன்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால், நிலநடுக்கம் ஏற்பட்டதா என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம், காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 3.35 மணிக்கு பலத்த சத்தம் கேட்டது. அந்த சத்தத்துடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக பலரும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் பரவ, பலரும் தாங்களும் 20 நொடிகள் வரை உணர்ந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், காங்கயம் சாலை நாச்சிபாளையத்தில் செயல்பட்டுவரும் பல்பொருள் அங்காடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு காட்சிகள் பதிவாகியுள்ளன.

அப்போது, திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால், பல்பொருள் அங்காடியின் கண்ணாடி கதவுகள் மற்றும் கடையில் வேலை செய்யும் நபர் திடீரென அதிர்ச்சியாகும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இயற்கையாக உருவான நில அதிர்வா அல்லது அருகில் உள்ள பகுதிகளில் குவாரிகளில் வெடிவைத்து உடைக்கும்போது ஏற்பட்ட பலத்த அதிர்வா என தெரியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர் கூறும்போது, ‘‘நீங்கள் கூறிதான் இந்த தகவல் குறித்து கேள்விப்படுகிறோம். அதேசமயம், இப்பகுதியில் நில அதிர்வு கருவிகள் இல்லை. சேலத்தில்தான் உள்ளன. இதுதொடர்பாக விசாரிக்கிறோம்” என்றனர்.

x